*ரூ.5 லட்சம் நகைகள் பறிமுதல்
திருபுவனை : திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் கீதா (42). இவரது வீட்டில் உறவினர் சுடர்மணி (22) என்பவர் தங்கி, திருபுவனை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி கீதா தங்க நகைகளை அணிந்து கொண்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டில் உள்ள பீரோவில் தனது நகைகளை கழற்றி வைத்துள்ளார். மறுநாள் அதே பகுதியில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்கு செல்வதற்காக மீண்டும் நகைகளை போட்டுக் கொள்வதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, நகைகளை யாரும் திருடவில்லை என்று கூறிவிட்டனர். அப்பொழுது சுடர் மணி தனது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கீதாவின் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் சுடர்மணி மீது கீதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளிநேலியனூரில் உள்ள அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது சுடர் மணியின் உறவினர்கள் காவல்நிலைத்தில் புகார் ஏதும் கொடுக்க வேண்டாம், நாங்கள் சுடர்மணியை கண்டுபிடித்து தருகிறோம் என்று கீதாவிடம் உறுதி அளித்தனர். இதனால் கீதா காவல்துறையில் புகார் ஏதும் கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி திருபுவனை காவல் நிலையத்தில் கீதா தனது வீட்டில் காணாமல் போன நகைகள் மற்றும் சுடர்மணி குறித்தும் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திருபுவனை பெரியபேட் செல்லும் சாலையில் திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் குற்றவியல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சுடர்மணியை பிடித்து நகைகளை திருடியது பற்றி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் சுடர்மணியை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கீதாவின் வீட்டிலிருந்த ஒன்பதரை பவுன் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து நெக்லஸ், வளையல், செயின்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். திருடிய நகைகளை திருபுவனை மற்றும் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அடகு கடைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்று செலவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, திருட்டு நகைகள் அடமானம் வைக்கப்பட்ட கடைகளில் இருந்து நகைகளை மீட்டு சுடர் மணியை (22) கைது செய்து புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.