அண்ணாநகர்: அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை கைது செய்தனர்.சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்துவரும் 36 வயது மதிக்கத்தக்க பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
நான், அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். தனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தனியாக வசித்து வருகின்றார். எனது குழந்தைகளை அக்கா பராமரித்து வருகிறார். தினமும் இரவில் தாய் என்னுடன் தூங்கிவிட்டு அதிகாலையில் அவரது வீட்டுக்கு சென்று விடுவார்.
கடந்த 29ம் தேதி இரவு தாய் வராததால் நான் மட்டும் தனியாக தூங்கினேன். அப்போதுஅருகில் ஒருவர் படுத்திருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டேன். அந்த நபர், தான் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் குடியிருக்கும் நபர் என்று தெரிந்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். நான் சத்தம் போட்டதால் எனது வாயை பொத்தி கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் அவர் தன்னிடம் அத்துமீற முயன்றபோது தப்பிக்க முயற்சி செய்தேன்.
அப்போது அவர் தான் வைத்திருந்த கத்தியால் எனது கழுத்து, முதுகில் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். காயம் அடைந்த என்னை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து வாலிபரைதேடி வந்தனர். இந்தநிலையில், கடந்தமாதம் 30ம்தேதி அம்பத்தூர் நீதிமன்றத்தில் அந்த வாலிபர் சரணடைந்தார். இதுபற்றி நடத்திய விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முக்கேஷ்(26) என்று தெரிந்தது. முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றார். பெண்ணிடம் அத்துமீறல், வீடுபுகுந்து கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து முக்கேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.