கடலூர் : தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல பேக்கேஜ் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 5 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த பரமசிவம் (70). இவர் தனது நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
இதற்காக முகநூலில் வந்த ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் திருப்பூர் மாவட்டம் மடத்துபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஹரிஹரசுதன் (36) என்பவர் பேசியுள்ளார். அப்போது அவரிடம் பரமசிவம் தனக்கும் தனது நண்பர்கள் 18 பேருக்கும் தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கு பேக்கேஜ் தயார் செய்து தரும்படி கேட்டுள்ளார்.
இதை கேட்ட ஹரிஹரசுதன் பரமசிவம் மற்றும் அவரது நண்பர்களை தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதற்காக பரமசிவத்திடம் தனது வங்கி கணக்கு மூலம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால், ஹரிஹரசுதன் அவர் கூறியபடி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து பரமசிவம் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரிஹரசுதனின் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களின் விபரங்களை கொண்டு அவர் தலைமறைவாக இருந்த கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிக்கு சென்று அவரை கைது செய்தனர்.
ஹரிஹரசுதன் மீது மதுரை மற்றும் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ் வசதி செய்து கொடுப்பதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் பதிவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹரிஹரசுதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.