சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசுப்பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ்ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், போலீசார் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர். இதன்படி அஜித்குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது. மேலும், திமுக சார்பில் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு ஆறுதல் கூற நேற்று அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் சென்றிருந்தனர். அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன்குமாருக்கு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆறுதல் கூறினார். அப்போது, தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார்.