Sunday, July 20, 2025
Home செய்திகள்Showinpage இளைஞர் அஜித் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்த முதல்வரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

இளைஞர் அஜித் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்த முதல்வரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

by Nithya

சென்னை: இளைஞர் அஜித் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்த முதல்வரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

*விசாரணைக் கைதி, காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்றது!

*சற்றும் தாமதமின்றி சி.பி.அய்.யிடம் விசாரணையை ஒப்படைத்த முதலமைச்சரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது!

*ஒப்பனைகள் கலையும் – உண்மைகள் பலியாகாது, இவ்வாட்சியில்!

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள ஒரு கோவிலில் ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு சம்பந்தமாக, அக்கோவிலில் செக்யூரிட்டி (காவலாளி)யாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை, அப்பகுதி காவல் நிலையத்தைச் சார்ந்த 6 காவலர்கள், விசாரணைக்கு என அழைத்துச் சென்று, மிருகத்தனமான வகையில் (‘Third Degree’) அடித்துச் சித்திரவதை செய்ததோடு, அவரது உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்ற நிலை கேட்டு, மனித இதயமுள்ள யாராலும் கலங்காமல் இருக்கவே முடியாது.

*மனிதநேயமற்றது

அதைவிடக் கொடுமை, சட்டப்பூர்வமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுக்கு முன்பே, விசாரணைக் குழு என்ற பெயரால், காவல்துறையினர் நடந்துகொண்டது சட்ட விரோத, மனிதநேயமற்ற கொடுமையாகும். சித்திரவதைகளைச் செய்துவிட்டு, வலிப்பு காரணமாக என்று பின்னால் பதிவு செய்தது, காவல்துறையினருக்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகார போதை, ‘இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகள்’ போன்ற இத்தகையவர்கள் அத்துறைக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிடக் கூடியவர்கள்.

1. இந்த லாக்–அப் மரணம்பற்றி செய்தி அறிந்தவுடன், நொடிகூடத் தாமதிக்காமல், நேர்மையுடனும், மனிதாபிமானமுடனும், கண்ணியத்துடனும் எப்போதும் கடமையாற்றும் நமது முதலமைச்சர் அவர்கள், அதற்குக் காரணமான 5 காவலர்களை இடைநீக்கம் செய்ததோடு, சம்பந்தப்பட்ட மேலதிகாரியான மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்மீது நடவடிக்கை; மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரைப் பதவி நீக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளார்.

*அரசு தரப்பில் உடனடி நடவடிக்கை!

2. சில மணிநேரத்தில், அம் மாவட்ட அமைச்சரான கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள், அந்த இழப்புக்கு ஆளான, துன்பத்திற்குரிய அஜித்குமாரின் தாயார், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினரை, மாவட்ட ஆட்சியர் அவர்களோடு சென்று, நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய நடவடிக்கைகளை தயவு தாட்சண்யமின்றி எடுக்க முதலமைச்சர் மற்றும் அரசு தயாராக இருப்பதையும் விளக்கிக் கூறினர்.

உடனடியாக நமது முதலமைச்சர் அவர்களும், சொல்லொணா சோகத்திற்கு ஆளான, அஜித்குமாரின் தாயாரிடம் தொலைப்பேசியில் காணொலிமூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, இதில் ஈடுபட்ட எவரையும் சட்டம் தண்டிக்காமல் விடாது; நியாயப்படுத்த முடியாத அளவு கொடுமை இது என்பதைக் கூறி, ஆறுதல் படுத்தியுள்ளார்!

அத்துடன், செய்தியாளர்களிடமும் இந்த உறுதிமொழியையும் விளக்கிக் கூறி, இதுபோன்ற நிகழ்வுகள் எங்கும், எவருக்கும் நிகழாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

*சி.பி.அய்.மூலம் விசாரணை

சம்பந்தப்பட்ட நிகழ்வுக்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை பாய்வதுடன், விசாரணை எந்தவித தலையீடும் இன்றி நடைபெறும் என்று உறுதி கூறியுள்ளதோடு, சி.பி.அய்.மூலம் விசாரணை நடைபெற, தமது அரசுக்கு எந்த ஆட்சபேணையும் இல்லை என்று கூறி, அதை அறிவிக்கவும், ‘‘மடியில் கனமில்லை. எனவே, வழியில் பயமில்லை’’ என்பதற்கேற்ப, புயல் வேகத் தொடர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றார்.

தி.மு.க. அரசுமீது உருப்படியான குற்றச்சாட்டு ஏதும் கூற முடியாமல், தேர்தலில் ஓட்டு வேட்டையாட இதுதான் தமக்குத் திடீரென்று கிடைத்த வாய்ப்பு என்று திட்டமிட்டு, அரசியல் தூண்டிலைத் தூக்கிக் கொண்டு கிளம்பியுள்ளனர் சிலர்.

ஆனால் நீதிப்படி, நியாயப்படி, மனிதநேயப்படி என்ன செய்ய வேண்டுமோ, மிச்ச சொச்சம் இல்லாமல், அவற்றை முதலமைச்சர் செய்துள்ளார் என்றால், ‘திராவிட மாடல்’ அரசு ஒருபோதும் தடம் மாறாத மனிதநேயக் கடமையைச் செய்யும் நேர்மைமிக்க ஆட்சி என்பதைக் காட்டியுள்ளது.
இதுபோன்ற எதிர்பாராத நடவடிக்கைகளால், மக்களைக் குழப்பிவிட முடியாது.

*உண்மைகள் ஒருபோதும் பலியாகாது!

‘துப்பாக்கிச் சூடு நடைபெற்றதை டி.வி. மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லும் முதலமைச்சர் அல்ல, இன்றைய முதலமைச்சர் என்பதற்கு அவரது மனிதாபிமானமும், கருணை உள்ளமும் கொண்ட செயல்திறனே சான்று பகரும்!

ஒப்பனைகள் கலையும் – உண்மைகள் ஒருபோதும் பலியாகாது – இவ்வாட்சியில்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi