நாமக்கல்: நாமக்கல்லில் ஆர்டிஓ என கூறி, வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்ததும் அம்பலமாகி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் கோவையில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்தினி (27) என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பொள்ளாச்சியில் தன்வர்தினி ஆர்டிஓவாக (சப் கலெக்டர்) பணியாற்றுவதாக அவரது பெற்றோர், நவீன்குமார் குடும்பத்தினரிடம் கூறினர். திருமண அழைப்பிதழிலும் தன்வர்தினி பெயருக்கு பின்னால் அந்த பதவியே அச்சிடப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர், தன்வர்தினி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்துள்ளார். சனி, ஞாயிறு போன்ற நாட்களில் மனைவியை சந்திக்க நவீன்குமார் பொள்ளாச்சி சென்றுள்ளார். அப்போது கோவை, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கணவன், மனைவி இருவரும் சென்று வந்துள்ளனர். மேலும் மாதந்தோறும் கணவரின் வங்கி கணக்கிற்கு, தன்வர்தினி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70
ஆயிரம் வரை சம்பள பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பின், நவீன்குமாரின் உறவினர் செந்தில்வேல் என்பவர், பொள்ளாச்சி கோட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது அங்கு தன்வர்தினி என்ற பெயரில் ஆர்டிஓ யாரும் வேலை செய்ய வில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி நவீன்குமார் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி நவீன்குமார், தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, தன்வர்தினி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறி, தேர்வாணைய செயலாளர் கையெழுத்திட்ட சான்றிதழ், தலைமை செயலாளர் கையெழுத்திட்ட அடையாள அட்டை போன்றவற்றை காண்பித்துள்ளார். இதையடுத்து சென்னை தலைமை செயலகம் சென்று நவீன்குமார் மற்றும் அவரது உறவினர்கள், தன்வர்தினியின் பதவி குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் காண்பித்த சான்றிதழ், அடையாள அட்டை, டிஎன்பிஎஸ்சி பட்டியல் அனைத்தும் போலியானது என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த நவீன்குமார், இதுபற்றி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில், தமிழ்நாடு அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தி, அரசு அதிகாரி என ஏமாற்றி, என்னை தன்வர்தினி திருமணம் செய்துள்ளார். போலி ஆவணங்களை தயாரித்த அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, வழக்குபதிவு செய்து, தன்வர்தினியை நேற்று முன்தினம் கைது செய்தார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட போலி பெண் ஆர்டிஓ., தன்வர்தினியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. வங்கி அதிகாரி நவீன்குமாரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தங்களது மகனுக்கு ஆன்லைன் மூலம் வரன் பார்த்துள்ளனர். அப்போதுதான் நாமக்கல் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தன்வர்தினியை தேர்வு செய்துள்ளனர். ஆரம்பத்தில் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பயிற்சி ஆர்டிஓவாக இருப்பதாக தன்வர்தினியின் பெற்றோர் கூறியுள்ளார். திருமணமான பின்னர் பொள்ளாச்சிக்கு ஆர்டிஓவாக இடமாறுதல் செய்யப்பட்டதாக தன்வர்தினி கூறியுள்ளார். அப்போது நவீன்குமார் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்ததால், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் பொள்ளாச்சிக்கு சென்று மனைவியை சந்தித்துள்ளார்.
அப்போது அவர் தனது கணவரை பணிபுரியும் அலுவலகத்திற்கு ஒரு முறை கூட அழைத்துச் செல்லவில்லை. மாறாக ஓட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாதந்தோறும் கணவரின் வங்கி கணக்கிற்கு தன்வர்தினி பணம் அனுப்பியதால் நவீன்குமார் குடும்பத்தினருக்கு சந்தேகம் வரவில்லை. தன்வர்தினி தன் தாயுடன் பொள்ளாச்சியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, வேலைக்கு செல்வதாக கூறி வந்துள்ளார். மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். இவருக்கு உதவியாக மேலும் பலர் இருந்துள்ளனர். தன்வர்தினிக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த ஒரு நபரும் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள தன்வர்தினி, பிஇ படித்துள்ளார். பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு எழுதியுள்ளார். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் நேர்முகதேர்வில் அவர் தேர்வாகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.