அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 23 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன், கடந்த 6ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலையில் மர்மநபர் ஒருவர் நைசாக மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். திடுக்கிட்டு எழுந்த அந்த பெண், அதிர்ச்சியுடன் சத்தம் போட்டார். அருகில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் எழுந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை விரட்டினர். ஆனால் அவர் தப்பி விட்டார். இதுகுறித்து பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் முகப்பேர் மேற்கு, அம்பேத்கர் நகரை சேர்ந்த வெற்றி (36) என தெரியவந்தது. அவரை நேற்று போலீசார், பெண் வன்கொடுமை கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.