ராஞ்சி: ஜார்க்கண்டில் இளம்பெண்ணை ஒருவர் வெட்டி 50 துண்டுகளாக கூறுபோட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் ஜோர்டாக் கிராமத்தில் கடந்த 24ம் தேதி தெரு நாய் ஒன்று மனித உடல் துண்டை கவ்விக்கொண்டு வந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள காட்டில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சடலம் ஒன்று வெட்டி கூறு போடப்பட்டு வீசப்பட்டு கிடந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். மேலும் அங்கு கிடந்த பையில் இருந்த ஆதார் அட்டையின் அடிப்படையில் அந்த பெண் அடையாளம் காணப்பட்டார். இது குறித்த விசாரணையில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தமிழ்நாட்டில் உள்ள இறைச்சி கடையில் நரேஷ் பெங்ரா வேலை செய்தபோது இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே ஜார்க்கண்ட் திரும்பிய நரேஷ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இளம்பெண்ணுக்கு தெரிவிக்கவில்லை. திருமணம் முடிந்து நரேஷ் மீண்டும் தமிழ்நாடு சென்றுள்ளார். அங்கு திருமணம் செய்ய சொல்லி இளம்பெண் வற்புறுத்தியதால் கடந்த 8ம் தேதி இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். ஆனால் நரேஷ் அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அவரை கொலை செய்துள்ளார். பின்னர் சுமார் 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி காட்டு விலங்குகளுக்கு வீசியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.