சேலம்: சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் கள்ளக்காதலனுடன் தாலி கட்டிக்கொண்டு 2 குழந்தைகளின் தாய் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் மஞ்சள்கயிறால் தாலியை கட்டிக்கொண்டு சூரமங்கலம் காவல்நிலையத்தில் 24 வயது காதலனுடன் நேற்று காலை தஞ்சமடைந்தார். தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் அங்கிருந்த போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் ஒன்றரை வயதில் 2 குழந்தைகள் இருப்பதும், கணவர் இருக்கும்போதே வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இன்னொரு தாலியை கட்டிக்கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் வந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது கணவருக்கு போன் செய்து காவல்நிலையத்திற்கு அழைத்தனர். அதன்பேரில் காவல்நிலையம் வந்த அவர், மனைவி மற்றொரு தாலியுடன் கள்ளக்காதலனுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் மனைவியிடம் அந்த தாலியை கழற்றி வைத்து விட்டு தன்னுடன் வந்துவிடு என கெஞ்சினார். ஆனால் மனைவியோ நான் காதலனுடன் தான் செல்வேன் என கூறி காதலன் கட்டிய தாலியை கழற்ற மறுத்துவிட்டார். அதேநேரத்தில் இரண்டு குழந்தைகளையும், உறவினர்கள் காவல்நிலையம் அழைத்து வந்தனர். குழந்தைகளை பார்த்தும் மனம் இரங்காமல் அழுதுகொண்டிருந்தார். தாய் அழுவதை பார்த்த குழந்தை, அம்மா அழுறாங்க. என்னன்னு கேளுங்கன்னு பெண் போலீசாரிடம் கூறியது. இதனை பார்த்த உறவினர்கள் கண்கலங்கினர். இதையடுத்து கள்ளக்காதலனின் பெற்றோரை வரவழைத்த போலீசார், மகனுக்கு புத்தி சொல்லி அழைத்துச் செல்லுங்கள் என்றனர்.
அந்த வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அவரிடம், ‘2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்து கொண்டு எத்தனை நாள் குடும்பம் நடத்துவாய்? அழகான குடும்பத்தை அழித்துவிடாதே’ என அறிவுரை கூறினர். நீண்டநேர அறிவுரைக்குப்பின் இதனை ஏற்றுக் கொண்ட கள்ளக்காதலன் பெற்றோருடன் புறப்பட்டுச் சென்றார்.
ஆனால் எனக்கு காதலன் தான் வேண்டும் என இளம்பெண் பிடிவாதமாக இருந்தார். அவரது கணவரோ, என்னோடு மனைவியை அனுப்பி வையுங்கள். குழந்தைகளுக்காக மனைவி வேண்டும் என்றார். இது எதையும் காதில் வாங்காத அப்பெண் பிடிவாதமாக காதலன் மீதே கண்ணாக இருந்தார். இதையடுத்து அப்பெண்ணை, கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், 2 நாள் அங்கிருக்குமாறு கூறினர். அதற்குள் அறிவுரை கூறி, கணவருடன் அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.