பெரம்பூர்: மருத்துவமனையில் குடிபோதையில் சிகிச்சை பெற்றுவரும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தவந்தபோது பெண் காவலர்களை ஆபாசமாக பேசி தாக்கியதுடன் சிகிச்சை அளித்த டாக்டர்களை செல்போன் வீடியோ எடுத்து எச்சரித்துள்ளார். சென்னை கொளத்தூர் விநாயகபுரம் விஜயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேகா (26). இவர் அழகு கலை நிபுணர். நேற்று நள்ளிரவு கொளத்தூர் புத்தாகரம் பகுதியில் குடிபோதையில் தரையில் விழுந்து கிடந்துள்ளார். இதை பார்த்தவர்கள் உடனடியாக ரேகாவின் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரு நண்பர், ரேகாவை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதன்காரணமாக பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின்படி, பெண் போலீசார் முத்துலட்சுமி, கௌசி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ரேகாவிடம் விசாரணை நடத்தியபோது ரேகா போலீசாரை பார்த்து அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. காவலர் முத்துலட்சுமி அணிந்திருந்த நம்பர் பிளேட் ப்ளூடூத் ஆகியவற்றை அறுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் வந்து ரேகாவை சமாதானப்படுத்த முயன்றபோது ரேகா, ‘’நான் ஒரு பத்திரிகையாளர் பிறகு அட்வகேட்’’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரேகாவை பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றபோது இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் விசாரணை நடத்தினார். அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்வதும் குடிபோதையில் பெண் காவலருடன் வாக்குவாதம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து மறுநாள் காலையில் காவல்நிலையத்துக்கு வரவேண்டும் என்று கூறி, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட ரேகா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவலர் முத்துலட்சுமி, பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி, வழக்கு பதிவு செய்தனர். இன்று காலை ரேகாவின் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அங்கிருந்து ரேகா தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.