நன்றி குங்குமம் தோழி
கல்யாணத்திற்கு நகை, உடை ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சீர்வரிசைகள் கொடுப்பது காலம் காலமாக நிகழ்ந்து வரும் சம்பிரதாயம். இதில் வசதிப்படைத்தவர்கள் வெள்ளியில் கொடுப்பார்கள். மற்றவர்கள் பித்தளையில் குடம், அண்டா என ஆரம்பித்து இட்லி பாத்திரம், விளக்கு என அனைத்தும் தருவது வழக்கம். இந்த பாத்திரங்களைதான் நாம் முன்பு பயன்படுத்தி வந்தோம். ஆனால் காலப்போக்கில் அதனை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் எவர்சில்வர், காப்பர் பாட்டம், நான்ஸ்டிக், டெஃப்லான் என மாறினோம். வசதிக்காக மாறிய பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளால் மீண்டும் பழமையை தேடிப் பயணிக்க துவங்கி இருக்கிறோம்.
அவ்வாறு மறந்து போன பாரம்பரிய பாத்திரங்களை மீண்டும் மீட்டெடுத்து அதனை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த கயல்விழி. இவரின் ‘எசென்ஷியல் டிரெடிஷன்’ கடையில் ஆர்கானிக் உணவுகள் மட்டுமில்லாமல், உணவுகளை ஆரோக்கியமான முறையில் சமைக்க உதவும் கல்சட்டி, மண்சட்டி, இரும்பு, பித்தளை, ஈயப் பாத்திரங்களையும் விற்பனை செய்கிறார். இதில் சமைக்கப்படும் உணவுக்கு இருக்கும் சுவை மற்ற எந்த பாத்திரங்களில் சமைத்தாலும் கிடைக்காது என்று உறுதியாக கூறுகிறார் கயல்விழி.
‘‘பிறந்தது, படிச்சது சென்னையில். பொறியியல் படிப்பு முடிச்சதும் அமெரிக்காவில் மேற் படிப்பிற்காக சென்றேன். அங்கு நிதி சார்ந்த நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இதற்கிடையில் திருமணம், குழந்தை, வேலை, படிப்பு என்று காலம் நகர்ந்தது. ஆனால் எனக்கும் என் கணவர் இருவருக்குமே சென்னைக்கு சென்றிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. முதல் குழந்தை பிறந்ததும் நாங்க சென்னைக்கு வந்திட்டோம். இங்கு நான் ஒரு வங்கியிலும் என் கணவர் ஊடகத்துறையிலும் வேலை பார்த்து வந்தோம்.
ஆனால் எங்க இருவராலும் அந்த வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. கஷ்டப்பட்டு ஒரு வருடம் கடத்தினோம். நாங்க அமெரிக்காவில் இருக்கும் போதே எங்க இருவருக்கும் சொந்தமா தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என் அப்பாவின் நண்பரை சந்திக்கும் வரை என்ன தொழில் என்பது குறித்து எந்த பிளானும் எங்க இருவருக்கும் இல்லை.
தென்காசி அருகே புளியங்குடி என்ற கிராமத்தில் உள்ள அவரின் தோட்டத்திற்கு நாங்க சென்றிருந்தோம். சிறிய வீடு, சுற்றி பல ஏக்கர் கணக்கில் தோட்டம். அதில் அவருக்கு தேவையான அனைத்தும் பயிர் செய்கிறார். தோட்டத்தில் என்ன விளைகிறதோ அதைக் கொண்டுதான் அவரின் வாழ்க்கை நகர்கிறது. அங்கு இல்லாத பொருட்களைப் பற்றி அவர் சிந்திப்பது கூட கிடையாது. அவர் எங்களிடம் சொன்ன அந்த விஷயம்தான் எங்க இருவருக்குள்ளும் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது.
அவர் தன் ஜீப்பிற்கு டீசலும், உப்பு மட்டும்தான் கடையில் காசு கொடுத்து வாங்குவதாக கூறினார். அவரைப்போல் என்னால் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடியாது. ஆனால் இயற்கை முறையில் விளைவிக்கும் மற்றும் தயாரிக்கப்படும் உணவுகளை என்னால் மக்களுக்கு கொடுக்க முடியும். அப்படித்தான் முதலில் நானும் என் கணவரும் ‘வேர்’ என்ற பெயரில் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்ய துவங்கினோம். பத்து வருடங்களுக்கு முன் வேர் துவங்கிய போது சென்னையில் பெரிய அளவில் ஆர்கானிக் உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் இல்லை.
ஒன்றிரண்டு கடைகள்தான் இருந்தது. அதிலும் பெரிய அளவில் காய்கறி, பழங்கள் எல்லாம் இல்லை’’ என்றவர், ஆர்கானிக் உணவினைத் தொடர்ந்து ஆர்கானிக் சமையல் பாத்திரங்களையும் அதில் இணைத்தது குறித்து விவரித்தார்.‘‘நான் ஆர்கானிக் ெபாருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டதும், கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களை சந்தித்தேன். அவர்கள் மூலம் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களின் தொடர்பு கிடைத்தது.
அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பொருட்களை எங்களின் பிராண்டில் சந்தைப்படுத்த ஆரம்பித்தோம். ஆனால் பத்து வருடத்திற்கு முன் அது எனக்கு சாத்தியமாக இல்லை. ஒன்று விலை. அடுத்த வாடிக்கையாளர்கள். காரணம், வாடிக்கையாளர்களுக்கு இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள் என்று நம்பிக்கை ஏற்படவில்லை. மேலும் அதை ஏன் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இதன் மகத்துவத்தை புரிய வைத்தோம். அதன் பிறகுதான் எங்களை நம்பத் துவங்கினார்கள்.
உணவினைக் கொண்டு வந்துட்டோம். அதனை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களும் இயற்கை முறையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் வீட்டில் பாட்டி, அம்மா எல்லோரும் இரும்பு, வெண்கலம், மண் சட்டியில் சமைப்பதை பார்த்திருக்கேன். நல்ல உணவினை கொடுக்கும் போது அதனை சமைக்கவும் நல்ல பாத்திரங்களை கொடுக்க முடிவு செய்தேன். அது குறித்த தேடலை எங்க வீட்டில் இருந்து துவங்கினேன். முதலில் இந்த பாத்திரங்களில் எப்படி சமைக்கலாம்… அதனால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொண்டேன். அதனைத் தொடர்ந்து இந்தப் பாத்திரங்கள் எல்லாம் எங்கு தயாரிக்கிறார்கள் என்று தேட ஆரம்பிச்சேன்.
பெரும்பாலான இடத்தில் இந்த பாத்திரங்களை கூலி வேலையில்தான் செய்து வந்தாங்க. இரண்டு நாள் செய்வாங்க. கையில் காசு சேர்ந்ததும் நாலு நாள் வேலைக்கு வரமாட்டாங்க. அதில் ஒரு சிலர் பல காலமாக இந்தப் பாத்திரங்களை தயாரித்து வந்தாலும், நாம் கேட்கும் டிசைன்களை செய்ய முன் வரமாட்டாங்க. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே கொஞ்சம் வளைந்து கொடுப்பார்கள். அவர்கள்தான் தற்போது எனக்கு இந்தப் பாத்திரங்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கிறார்கள்.
இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. அது பலருக்கு தெரிவதில்லை. நாமக்கல் கல்சட்டி பாத்திரங்களுக்கு ஃேபமஸ். இதனை சோப்ஸ்டோன் என்ற கல்லில் இருந்து செய்வார்கள். இதில் சமைக்கும் பாத்திரம் மட்டுமில்லாமல் மாடவிளக்கு, தயிர் ஊற்றி வைக்கக்கூடிய அனைத்தும் உள்ளது. அதே போல் இரும்பு பாத்திரங்கள் அனைத்தும் செங்கோட்டையில் பிரபலம். காஸ்ட் ஐயர்ன், இரும்பு தவா மற்றும் தண்டவாளக் தோசைக்கல் இவை அனைத்துமே இங்கு கிடைக்கும். இரும்பை உருக்கி நாம் விரும்பும் மோல்டில் ஊற்றினால் அது காஸ்ட் ஐயர்ன். ரயில் தண்டவாள இரும்பு கொண்டு பயன்படுத்துவதுதான் தண்டவாள தோசைக்கல். மற்ற இரும்பு பாத்திரங்கள் முழுக்க முழுக்க இரும்பு தகரம் கொண்டு செய்யப்படுபவை. செம்பு, பித்தளை, வெண்கலப் பாத்திரங்களுக்கு கும்பகோணம்.
இந்தப் பாத்திரங்களில் சமைப்பது நல்லது என்றாலும், அதனை நாம் முறையாக பராமரிக்க வேண்டும். சாதாரண மண் சட்டியில் உடனடியாக சமைக்க முடியாது. அதனை ஒரு நாள் முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு வாரத்திற்கு அதில் சாதம் வடிக்கப்படும் கஞ்சி அல்லது அரிசி அலசிய தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். தினமும் இந்த தண்ணீரை மாற்ற வேண்டும். அதன் பிறகு நன்கு கழுவி சமைக்கலாம். கல் சட்டி மற்றும் இரும்பு பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது சில சமயம் அதில் இரும்பின் உலோக வாசனை வரும். அதற்கு இரண்டு மூன்று முறை வெங்காயத்தை நன்கு சிவக்க வதக்கினால் உலோக வாசனை நீங்கும். பிறகு அதனை சமைக்க பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை கல் சட்டி மற்றும் இரும்பு பாத்திரங்களைப் பயன்படுத்திய பிறகு நன்கு கழுவி அதில் எண்ணெய் தேய்த்து வைக்க வேண்டும். அதே போல் மண்சட்டியினை டிஷ்வாஷிங் லிக்விட் கொண்டு கழுவக்கூடாது. சபீனா கொண்டுதான் கழுவ வேண்டும். இதில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை உறிஞ்சு கொள்ளக்கூடிய பண்பு மண் பாத்திரத்திற்கு உண்டு.
அதனால் ரசாயன பொருட்கள் கொண்டு கழுவினால் அதன் தன்மை அதில் தங்க வாய்ப்புள்ளது. பதப்படுத்தப்பட்ட சோப் ஸ்ேடான் என்று சொல்லப்படும் கல்சட்டியில்தான் சமைக்க வேண்டும். அவ்வாறு பதப்படுத்தாத கல்சட்டி பாத்திரத்தை அடுப்பில் வைத்தால் உடைந்திடும். அதே போல் ஈயப்பாத்திரத்தையும் நேரடியாக அடுப்பில் வைக்கக்கூடாது. ரசத்திற்கு தேவையான அனைத்தும் கலந்து பிறகு அதனை அடுப்பில் வைத்து நுரைக்கும் போது இறக்கிட வேண்டும். வெண்கலம் மற்றும் செம்பு பாத்திரங்களை புளி, எலுமிச்சை பயன்படுத்தி கழுவ வேண்டும். நல்ல பாத்திரங்களில் சமைக்கும் போது அதன் பலனை நாம் கண்டிப்பாக உணர முடியும்.
மேலும் நாங்க இந்தப் பாத்திரங்கள் அனைத்தையும் முன்கூட்டியே பழக்கப்படுத்தி இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதனை வீட்டில் ஒரு முறை நன்கு கழுவியவுடன் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஆனால் பயன்படுத்திய பிறகு நாங்க கூறும் ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’’ என்று ஆலோசனை கூறிய கயல், இந்தப் பாத்திரங்களை மக்கள் பயன்படுத்துவதற்கான அனைத்து விழிப்புணர்வும் ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
தொகுப்பு: ஷம்ரிதி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்