நெல்லை: கந்துவட்டி தராத இளம்பெண்ணை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு மிரட்டிய நெல்லை பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மேலப்பாளையம், சேவியர் காலனியை சேர்ந்தவர் டென்னிசன் (36). இவரது மனைவி பிரின்சி (30). இவர்கள், சிட்பண்ட் நடத்தி வருகின்றனர். தொழில் அபிவிருத்திக்காக டென்னிசன், கடந்த 2023ல் தச்சநல்லூரை சேர்ந்த பாஜ மாவட்ட துணை தலைவர் மேகநாதனிடம்(45) வட்டிக்கு ரூ.20 லட்சம் கடன் வாங்கினார்.
இதற்குரிய வட்டியாக தினமும் ரூ.20 ஆயிரத்தை டென்னிசன், மேகநாதனிடம் வழங்கி வந்தார். கடந்த சில மாதங்களாக சிட்பண்ட் தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் தினமும் கந்துவட்டியான ரூ.20 ஆயிரத்தை செலுத்தி வந்தார். இந்நிலையில் 2 மாதங்களாக தினமும் கந்துவட்டியான ரூ.20 ஆயிரத்தை வழங்க முடியாமல் டென்னிசன் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன், 2 மாதங்களுக்கு முன்பு டென்னிசன் வீட்டிலிருந்த அவரது காரை பறித்துக்கொண்டார்.
மேலும் டென்னிசன் மனைவியான பிரின்சியை மிரட்டி பத்திர பேப்பரில் வீட்டை அடமானமாக பெற்றுக்கொண்டதாக கையெழுத்து பெற்றார். இந்நிலையில் மேகநாதன் நேற்று முன்தினம் டென்னிசன் வீட்டிற்குள் சிலருடன் புகுந்து அங்கிருந்த பொருட்களை அள்ளி வீட்டிற்கு வெளியே வைத்து விட்டு அவர் கொண்டு வந்த பொருட்களை வீட்டிற்குள் வைத்தார். பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றி வீட்டை பூட்டி சென்றுவிட்டார். இதனால் வீட்டிற்கு வெளியே டென்னிசனும் அவரது குடும்பமும் தங்குவதற்கு இடமில்லாமல் நிர்கதியாக நின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர கிழக்கு துணை கமிஷனர் வினோத் சாந்தாராமிடம், டென்னிசன் தம்பதியினர் புகார் மனு அளித்தனர். இதனை விசாரித்த அவர், மேகநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேலப்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி கந்துவட்டி, அவதூறாக பேசியது, மிரட்டல், வீட்டை பூட்டியது, பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பாஜ மாவட்ட துணை தலைவர் மேகநாதனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு பாத்ரூமுக்கு சென்ற மேகநாதன் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக போலீசார் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களிடம் மேகநாதன் வயிறு வலிப்பதாக கூறியதால் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் விசாரித்து, வருகிற 27ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மேகநாதன் விசாரணை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.