நார்த்தாம்டன்: இங்கிலாந்து-இந்திய யு19 அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் ஆட்டம் நார்த்தாம்டனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. அதனால் ஆட்டம் தலா 40ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 40ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 268ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ஆட்டமிழக்காமல் 76, டவ்கின்ஸ் 62, முகமது 41 விளாசினர். இந்திய தரப்பில் கனிஷ்க் 3, அறிமுக வீரர் தீபேஷ்(தமிழ்நாடு) ஒரு விக்கெட் கைப்பற்றினர். அடுத்து இந்தியா களமிறங்கியது. ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக கேப்டனாக களம் கண்ட அபிக்யான் குண்டு 12ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் வைபவ் சூரியவன்ஷி 31 பந்துகளில் 6பவுண்டரி, 9 சிக்சர் விளாசி 86, விஹான் 46ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் பெவிலியன் திரும்பிய நேரத்தில் கனிஷ்க்(46ரன்), தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.அம்பரிஷ்(31ரன்) இணை கடைசி வரை களத்தில் நின்று 34.3ஓவரிலேயே இலக்கை கடக்க உதவினர். அதனால் இளைய இந்தியா 6விக்கெட் இழப்புக்கு 274ரன் வெளுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை வசப்படுத்தியது. இங்கிலாந்து தரப்பில் அலெக்சாண்டர் 2விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.