சென்னை: மொரீசியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு இதய சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து வரப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை நடுவானில் பரிதாபமாக உயிரிழந்தது. மொரீசியஸ் நாட்டிலிருந்து ஏர் மொரீசியஸ் பயணிகள் விமானம் 320 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32) தம்பதியினர் பிறந்து 8 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை லிஸ்னாவுடன் பயணம் செய்தனர். லிஸ்னாவின் இதய சிகிச்சைக்காக இருவரும் சென்னைக்கு மருத்துவ உதவியாளருடன் வந்து கொண்டிருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பெண் குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதனை அறிந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் விமானம், சென்னையில் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி குழந்தையை பரிசோதித்தனர். அப்போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதை அறிந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். சக பயணிகளும் கண்ணீர் வடித்தபடி தம்பதிக்கு ஆறுதல் கூறினர்.
தகவல் அறிந்து வந்த சென்னை விமான நிலைய போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதய சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவத்தை அறிந்த பயணிகள் சோகத்தில் மூழ்கினர்.