* ஐ.டி. ஊழியர் என கூறி ஏமாற்றியதும் அம்பலம்
* காதலன், பெற்றோரிடம் போலீசார் விசாரணை
சென்னை: சென்னை கொடுங்கையூரில் லிவிங் டுகெதர் முறையில் காதலனுடன் வாழ்ந்து வந்த பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டார். ஐடி ஊழியர் எனக்கூறி அவர் ஏமாற்றி வந்ததும் அம்பலமானது. டாக்டர் உள்ளிட்ட பல பேரை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவரது மனைவி வரலட்சுமி (46). இவர்களது மகள் நித்யா (26), மகன் தமிழ்செல்வன் (25). இதில் நித்யா அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து வருவதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவரது தந்தை பாஸ்கர் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி வீட்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும் மகள் மற்றும் மகனை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
இதில் நித்யா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்குகிறேன் எனக் கூறி தனியாக தங்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு கொடுங்கையூர் விவேகானந்தா காலனி 6வது தெருவை சேர்ந்த பாலமுருகன் (28) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. பாலமுருகன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அம்பத்தூரில் வீடு எடுத்து லிவிங் டுகெதர் என்ற முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 5வது தெருவில் வீடு எடுத்து நித்யா மற்றும் பாலமுருகன் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நித்யா, ‘‘எனது பெற்றோர் வீட்டிற்கு வருகிறார்கள்.
அதனால் நீ வீட்டில் இருக்க வேண்டாம்’’ எனக் கூறி பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். அன்று மாலை 5 மணி அளவில் பாலமுருகன் மீண்டும் வீட்டிற்கு வரும்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது விஷம் குடித்து நித்யா மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக பாலமுருகன் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து நித்யாவை பரிசோதனை செய்துவிட்டு நித்யா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நித்யாவின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அதில், நித்யா ஒரு பையனோடு பழகி வருவது மட்டுமே தெரியும் என்றும், லிவிங் டு கெதர் முறையில் இருப்பது தெரியாது என்றும் நித்யாவிடம் 25 சவரன் நகைகள் இருந்தது. அதனை காணவில்லை. பாலமுருகன் எனது மகளை கொன்று விட்டு நகைகளை எடுத்திருக்கலாம் என நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தனர். போலீசார் பாலமுருகனிடம் விசாரணை நடத்தியபோது நித்யாவின் பெற்றோர் அடிக்கடி நித்யாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும், கடைசியாக நித்யாவை பார்க்க அவரது தாய் வந்தபோது கூட 4 ஆயிரம் ரூபாய் பணத்தை நித்யாவின் பர்ஸிலிருந்து எடுத்ததாகவும், இதனால் நித்யாவிற்கும் அவரது தாய்க்கும் சண்டை ஏற்பட்டதாகவும் நேற்று முன்தினம் மாலை நித்யாவை நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் நித்யா போனை எடுக்காததால் வீட்டிற்கு, தான் வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அம்பத்தூரில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது நித்யாவிற்கு வீட்டில் வைத்து தாலி கட்டியதாகவும், ஆனால் அதன் பிறகு நித்யா அதனை கழற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கொடுங்கையூர் போலீசார் நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த நித்யாவின் உடம்பில் எந்தவித காயங்களும் இல்லை என்பதும், விஷம் குடித்து உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வீடியோ கால் மூலம் வியாபாரம்: போலீசார் நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது நித்யா கடைசியாக ஒருவரிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
போலீசார் வரவழைத்த நபர் ஒரு மருத்துவர் என்பதும், நித்யா இவரை மிரட்டி எட்டரை லட்சம் ரூபாய் வரை வாங்கியதும் தெரிய வந்தது. உண்மையில் நித்யா ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி தனது பெற்றோரையும் உடன் பழகுபவர்களையும் ஏமாற்றி உள்ளார். உண்மையில் நித்யா வீடியோ காலில் அரை நிர்வாணமாக இருப்பதற்கு குறிப்பிட்ட தொகை, முழு நிர்வாணமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை என பேசி பல பேரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்துள்ளதும், இந்த வலையில் மருத்துவரும் விழுந்து சுமார் 8.30 லட்சம் வரை செலவு செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வலையில் சிக்கியவர் தான் பாலமுருகன் என்பதும், அவரும் 5 சவரன் நகை மற்றும் பணத்தை இழந்திருப்பதும் தெரிய வந்தது.
நித்யாவின் பெண் தோழி ஒருவரை பாலமுருகன் வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் இருந்தபோது நித்யா திடீரென வீட்டிற்கு வந்துவிட்டதால் இருவருக்கும் இடையே அப்போது பிரச்னை தொடங்கியுள்ளது. அன்று முதல் இருவரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு வந்துள்ளனர். மேலும் நித்யா தன்னுடன் பழகுபவர்களை பார்ட்டி, பப் என அழைத்துச் சென்று மது போதையில் இருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவ்வாறு இளம் வயதிலேயே மது போதைக்கு அடிமையாகி அதிக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக பெற்றோரிடம் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நித்யா உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக டாக்டருக்கு போன் செய்து, நான் உன்னுடன் வாழ வேண்டும் என பேசி உள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பே நித்யாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் டாக்டர் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து விலக ஆரம்பித்துள்ளார். இது நித்யாவிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சம்பவத்தன்று மது போதையில் விஷத்தை அருந்தி நித்யா தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் உஷார்
பெரும்பாலான பெற்றோர் மகள்களை வேலைக்கு அனுப்புவதோடு சரி, அவர்கள் தங்களது மகள்கள் எங்கு தங்கி வேலை செய்கிறார், எப்போது வருகிறார் என்பது பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அப்படியே பணிபுரிந்தாலும் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.