ஒட்டன்சத்திரம்: 2 பெண் குழந்தைகளை தூக்கிட்டு கொன்றுவிட்டு தாய், மகள் ஆகியோர் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் தகாத உறவால் குடும்பமே அழிந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகுழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவரது மகள் காளீஸ்வரி (50). இவரது கணவர் ஆறுமுகம் (55). இவர்களது மகள்கள் பவானி (30), பவித்ரா (28). பவானியை கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள சௌந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். இதன்பின்னர் அவரது தம்பி பிரபாகரனுக்கு பவித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளனர். பவித்ரா-பிரபாகரன் ஆகியோருக்கு லித்திக்ஸா (7), தீப்தி (5) என்ற மகள்கள் உள்ளனர். பிரபாகரன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த வாகன விபத்தில் ஆறுமுகம் இறந்தார். அவருக்கு வந்த இன்சூரன்ஸ் பணம் மூலம் சின்னகுழிப்பட்டியில் உள்ள தனது வீட்டை காளீஸ்வரி இடித்து கட்டியுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஒருவர் பெயிண்டிங் வேலைக்கு அடிக்கடி வந்தபோது அவருடன் பவித்ராவுக்கு தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக பவித்ரா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில், பவித்ராவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட கணவர் பிரபாகரன் கண்டித்துள்ளார். இதனால் அவ்வப்போது கணவருடன் கோபித்துக்கொண்டு பவித்ரா தாய் வீட்டுக்கு வருவதும் குடும்பத்தார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதுமாக இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், பவித்ரா கணவருடன் கோபித்துக்கொண்டு 2 பெண் குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார். அந்த சமயத்தில் பெயிண்டருடன் தனது பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார். இது தெரிந்ததும் காளீஸ்வரியும் செல்லம்மாளும் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த பவித்ரா நேற்று மாலை பெயிண்டருடன் ஓடிப்போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்ததும் பவித்ராவின் பாட்டி செல்லம்மாளும் தாய் காளீஸ்வரியும் மனவேதனை அடைந்துள்ளனர். குடும்பத்தின் பெயரை கெடுத்துவிட்டாரே என்று தாயும் மகளும் புலம்பியுள்ளனர். இந்த நிலையில், குடும்பதே தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்து முதலில் பவித்ராவின் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு அவர்கள் இறந்துவிட்டனர் என்று உறுதி செய்தபின்னர் செல்லம்மாளும் காளீஸ்வரியும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இன்று அதிகாலை இதுபற்றி தகவல் கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர் இடையகோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக பவித்ராவையும் தகாத உறவு காதலனையும் தேடி வருகின்றனர். இளம்பெண்ணின் தகாத உறவால் ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.