கருங்கல் : கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஜான்சிங் (42). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரி சுஜா(36). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். சுஜா மகனை இருச்சக்கர வாகனத்தில் தினசரி பள்ளியில் கொண்டு விட்டு அழைத்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் மேரி சுஜா நேற்று மாலை மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கருங்கல் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காக்கவிளை பகுதியில் வரும் போது எதிரே தாறுமாறாக வந்த சொகுசு கார் மேரி சுஜாவின் இருச்சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் மேரி சுஜா தூக்கி வீசப்பட்டார். சொகுசு கார் எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த காம்பவுண்ட் சுவரை இடித்து நின்றது. இதில் மின் கம்பம் உடைந்தது. அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது மேரி சுஜா சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
இது குறித்து கருங்கல் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேரி சுஜாவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்தது மிடாலக்காடு புதுக்காடுவெட்டி விளை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் அஜித் லிபின்(28) என்பதும், மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் அஜித் லிபின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.