வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் உடல்நலம் தொடர்பான பிரச்னையால், ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களம் கண்டுள்ளார். இரு கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘உலகம் முழுவதும் அரசியல் சூழ்நிலைகள் மோசமாகி வருகிறது.
நாம் உலகப் போரை எதிர்நோக்கி உள்ளோம். அவர்களால் (ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்) நிலைமையைக் கையாள முடியாது. அமெரிக்காவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸ் மோசமானவர். அவருக்கு அதிபர் பதவிக்கான தேர்தலில் வாக்குகள் கிடைக்கக் கூடாது. கமலா ஹாரிஸ் மற்றும் டிம்.வால்ஸ் ஆகியோரை யாரும் மதிப்பதில்லை. இடதுசாரி தீவிரவாத எண்ணம் கொண்ட கமலா ஹாரிசின் செயல்பாடுகள் ஜோ பைடனின் அணுகுமுறையை காட்டிலும் வேறுபட்டது. அதற்காக நான் ஜோ பைடனின் ரசிகன் அல்ல’ என்றார்.