சென்னை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் 2025-26ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து 2025-26ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் கலைச் செம்மல் விருதிற்கு படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம். விண்ணப்பிக்கும் படைப்பாளர் நவீனபாணி அல்லது மரபுவழி பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும், பரிந்துரை செய்யப்படும் படைப்பாளிகளின் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க 20 கலைப் படைப்புகளின் வண்ண ஒளிப்படங்கள் (இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும், பரிந்துரைக்கப்படும் படைப்பாளர் குறித்து பத்திரிகையில் வெளிவந்த செய்திக் குறிப்புகள், கலை சார்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் இணைத்து அனுப்பி வைத்தல் வேண்டும்.
மாநில அளவில், தேசிய அளவில், உலக அளவில், தனியார் அமைப்புகள் நடத்திய கலைக்காட்சிகளில் படைப்பாளர்களின் கலை படைப்புகள் இடம் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும், பரிந்துரைக்கப்படும் படைப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய முழு தன்விவரக்குறிப்பு இடம் பெறுதல் வேண்டும். மேற்காண் தகுதிகளுடன் கீழ்க்காணும் முகவரி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை தமிழ் வளர்ச்சி வளாகம், 2ம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008, தொலைபேசி 044-28193157, 28193195 வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.