Tuesday, June 17, 2025
Home செய்திகள் முடியாததும் உன்னால் முடியும்!

முடியாததும் உன்னால் முடியும்!

by Porselvi

ஒரு முயற்சியில் இறங்குவருக்கு எய்த முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை என்று துணிவாக கூறலாம். சாதித்தவர்களும் பல இடையூறுகளை சந்தித்தபோதும், சற்றும் மனம் இழக்காமல் மென்மேலும் கொண்ட கொள்கையில் ஒன்று நின்றதால் பெற்று பெருமைகளே நிகர்சான்றாக உள்ளது. அவர்கள் உள்ளத்தளவில் கொண்ட உறுதியே அவர்களை உச்சத்தில் நிறுத்தியது என்று உரக்கச் சொல்ல முடியும். இதற்குச் சான்றாக பலரை கூற முடியும் என்ற போதும் உலகில் பட்டியலிட்ட மிகச்சிறந்த சாதனையாளர்களில் ஒருவரான ஷேன் ஸ்வார்னர் அவர் களின் சாதனையை படிப்பவர்கள் உறுதியாக தங்களிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை அறவே விட்டு விடுவார்கள் என்பது திண்ணம்.அவருக்கு எட்டு வயதில் ஹாஜ் கின்ஸ் வியாதி. மருத்துவர்கள் தந்த கெடுவானது 3 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பது சாத்தியம் என்பதாகும். அதிலிருந்து மீண்டு 16 வயதில் ஆஸ்கின்ஸ் சார்கோமா, கோல்ப் பந்து அளவிலான உருண்டையான கட்டி இம்முறை மருத்துவர்கள் தந்த கெடுவானது இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகும்.

உலகிலேயே இந்த இரண்டு கொடிய வியாதிகளுடன் சேர்ந்து கேன்சர் உள்ளதாகவும் மருத்துவரை கண்டுபிடித்து உயிருக்கு முற்றுப்புள்ளி விரைவில் என்று உறுதி செய்தனர். ஒன்றரை ஆண்டுகள் கிட்டத்தட்ட கோமாநிலையில் இருந்த ஷேன் ஸ்வார்னர் ஒருநாள் நடமாடக்கூடிய நிலையில் விழித்தார். எழுந்ததும் அவருக்குள் விழித்தது ஒரு உன்னதமான எண்ணம். மருத்துவரின் கூற்றையும் மாற்றி இருக்கின்றது. எனவே எவருமே சாதிக்காத ஒன்றை சாதித்து விட வேண்டும் ‘‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. உடனே தன்னுடைய நாட்குறிப்பில் அது குறித்த செய்தியை அழுத்தமாக பதிவு செய்தார். மலை ஏற்ற குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். பயிற்சிகளில் இறங்கினார். நம்பிக்கையை கொள்முதல் செய்து கொண்டார்.

பின்னர் சாதனைக்கான முயற்சிகளில் முழுமையாக இறங்கினார் ஷேன் ஸ்வார்னர். 2002 ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அங்குதான் சந்தித்த கேன்சர் நோயாளிகளின் பெயர்கள் மற்றும் பெயர் உதித்த கொடியினை நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா போன்ற இடங்களில் உள்ள சிகரங்களில் தடம் பதித்தார். அண்மையில் தென் அமெரிக்காவில் உள்ள ஆகான்காகுவா என்ற 23 ஆயிரம் அடி உள்ள சிகரத்தில் கால் பதித்து உலக உள்ளங்களில் நம்பிக்கையை பதிவு செய்துள்ளார்.தன்னுடைய சாதனைகள் மக்களை கவருவதற்கு அல்ல, மாறாக நம்பிக்கை ஊட்டுவதற்கு என்கிறார் ஸ்வார்னர். 30 நாட்கள் ஒருவர் உணவின்றி உயிருடன் இருக்கலாம், மூன்று நாட்கள் நீர் இன்றியும் இருக்கலாம், ஆனால் ஒருவர் தன்னம்பிக்கை இன்றி முப்பது நொடிகளுக்கு மேல் உயிரினம் இருப்பது சாத்தியமாகாது என்று சொல்லும் ஷேன் ஸ்வார்னர் இயக்கத்தக்க முயற்சிகள் பிரமிக்கத்தக்கதாக உள்ளன. கேன்சர் நோயாளிகளுக்கான மலை ஏறும் அமைப்பு ஒன்றினை உருவாக்கம் செய்து, அனைவருக்கும் நம்பிக்கை விதைக்கக்கூடிய வித்தகராகவும் விளங்கி வருகின்றார்.

இவருடைய வாழ்க்கை நமக்கு சொல்லக்கூடிய பாடம் என்னவென்றால் உடலின் பாதிப்பையும் மீறி செயல்படக்கூடிய ஆற்றல் மனதிற்கு உள்ளது. மன உறுதியின் மூலமாக உயரிய விருப்பங்களை அனைவராலும் அடைய முடியும். மனிதர்கள் யாவரும் உயர்ந்த இலக்குகளை அடைய முயற்சி செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலகில் முடியாததும் உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை இவருடைய வாழ்க்கை நமக்கு தருகிறது. இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியையும் சொல்லலாம்.சாதனைகள் நிகழ்த்த வறுமையும், தாம் சார்ந்த சமூகப் பின்னணியும் தடையாக இருந்தால் அவற்றை உடைத்து விட்டு முன்னேறலாம் என்பதற்கு இளம் பெண் காயத்ரிஒரு எடுத்துக்காட்டு. கர்நாடக மாநிலம் கோலாருக்குத் தங்க வயல்கள் இருக்கும் சிறப்போடு இன்னொரு சிறப்பும் சேர்ந்து இருக்கிறது.காயத்ரி என்னும் 25 வயது நிரம்பிய இளம் பெண் கர்நாடக மாநிலத்தில் சிவில் நீதிபதியாக தேர்வாகி இருப்பது தான் அது.இந்த நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் வயது 21. உச்சவரம்பு 35 வருடங்கள். விண்ணப்பிக்கும் நபர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெங்களூரில் இருக்கும் விதான் சவுதா கட்டிடத்திற்கு எதிரில் அமைந்து இருக்கிறது கர்நாடகா உயர்நீதிமன்றம். இணையத்தின் வழியே நடைபெற்ற நேரடித் தேர்வில் காயத்ரி கலந்து கொண்டார். தேர்வு முடிவுகள் வெளியான போது காயத்ரி தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அறிந்தார். வெற்றி பெற்று நீதிபதியாய் இருக்கிறார்.

பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளிகள்.மிகவும் சிரமப்பட்டு தங்கள் மகளைப் படிக்க வைத்திருக்கின்றனர்.தாங்கள் அணிவிக்கும் சிரமங்களை தங்களது பெண்ணும் அனுபவிக்கப் கூடாது என்பதில் காயத்ரியின் பெற்றோர் உறுதியாக இருந்தனர். அவர்களின் விருப்பத்தை காயத்ரி பழுதின்றி நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். காயத்ரி தனது பள்ளி படிப்பை பங்காருபேட்டைக்கு அருகில் உள்ள காரஹள்ளியில் இருக்கும் அரசு ஆரம்பப்பள்ளியிலும், பின்னர் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.கோலார் மகளிர் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார். கோலார் தங்க வயலில் இயங்கும் கெங்கல் அனுமந்தரையா சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை 2021 ஆம் ஆண்டு முடித்தார். பல்கலைக்கழக அளவில் நான்காவது இடம் பெற்றார்.முதலில் இவர் சிவராம் சுப்பிரமணியம் என்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றி இருக்கிறார்.காயத்ரின் திறமைகளை ஊன்றி கவனித்த அவர் சிவில் நீதிபதிக்கான தேர்வு எழுத ஆலோசனைகள் வழங்கினார். தேவையான புத்தகங்களையும் படிக்க கொடுத்து உற்சாகப்படுத்தினார். முதல் முறை சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு எழுதிய காயத்ரி அதில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்காக அவர் மனம் தளரவில்லை.மறுபடியும் தேர்வு எழுதினார், தேர்வும் ஆனார்.

மிக ஏழ்மையான குடும்பச் சூழலில் வளர்ந்த, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். மிக இளம் வயதிலேயே நீதிபதிப் பதவிக்கு வந்திருப்பதை உறவினர்களும், நண்பர்களும், சட்டத்துறையினரும் கொண்டாடுகின்றனர். மேலும் பல தரப்பினரும் காயத்ரிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது எனப் போற்றுகிறார்கள்.இவரது வெற்றி பலருக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. கொண்ட இலக்கில் உறுதியோடு இருந்து அத்துடன் கடினமாக உழைத்தால் சாதனையை நிகழ்த்தலாம் என்பதற்கு காயத்ரி ஒரு நடமாடும் உதாரணமாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi