திருப்பம் தரும் திருப்புகழ்! – 7
தென் பரங்குன்றில் திகழும் திருமுருகன் அருளும் தருவான்! பொருளும் தருவான்! பன்னிரண்டுகையாலும் வாரி வழங்கும் வடிவேலன் இருக்கும் போது உதவிபுரியாத மானிடர்களை உயர்த்திப் பாடிப் புலம்பித் தவிக்கலாமா? என்று புலவர்களைப் பார்த்து அறிவுரை கூறுகிறார் அருணகிரிநாதர்.
‘‘வேண்டிய போது அடியவர்
வேண்டிய போகமது
வேண்டவெறாது உதவும் பெருமாளே!’’
‘‘அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
அவை தருவித்து அருள் பெருமாளே!’’
– என்று கந்த வேளின் கருணையைப் புகழ்ந்து பாடுகிறார்.
செவ்வேள் முருகப் பெருமானைச் சிறப்பிப்பதற்காகத் தான் செம்மொழிச் செந்தமிழ் இருக்கிறது. அழகிய தமிழால் அழியும் மானிடர்களைப் புகழ்ந்து பாடுவது அவலம் என்று கண்டிக்கிறார் அருணகிரியார். அண்மையில் வாழ்ந்த கவியரசர் கண்ணதாசன், ‘மனிதர்களைப் பாடமாட்டேன்!’ என்றே மனம் நொந்து ஒரு பாடல் பாடியுள்ளார்.
“மானிடரை வாழ்த்தி அவர் மாறிய
பின்ஏசுவது
என் வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன் வலிக்கும் வரை
தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வ மிருகம்
ஓராயிரம் பாடல் உதவாதார் மேற் பாடி
ஓய்ந்தனையே பாழும் நெஞ்சே!’’
– என்று உளம் வருந்திப் புலம்புகிறார் கண்ணதாசன்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன் குடி (பழனி) சுவாமிமலை, திருத்தணி (குன்று தோறாடல்) பழமுதிர்சோலை என முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆறுபடை வீடுகளிலும், மற்றும் தமிழகம், வடபுலத்தில் விளங்கும் முருகன் தலங்களிலும் கண்டி, கதிர்காமம், திருகோணமலை என இலங்கை சார்ந்த முருகன் தலங்களிலும் நேரடியாகச் சென்று சுவாமியைத் தரிசித்து சந்தம் முந்தும் செந்தமிழ் பாடியுள்ளார் அருணகிரியார். அப்பாடல்கள் பலவற்றில் அக்காலப் புலவர்கள் பொருளாதார இடர்ப் பாடுகளால் மனிதர்களைப் புகழ்ந்து பாடி மனம் நொந்து திரும்பும் பரிதாப நிலையைப் பற்றி விவரிக்கிறார். கொடை பழகாத அக்கால பிரபுக்கள் புலவர்களைப் போற்றாது அவர்கள் நடைபழக மட்டுமே கற்பிக்கிறார்கள் என்று ஏளனம் செய்கின்றார்.
‘‘உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி
உளம் மகிழ ஆக கவிபாடி
உமது புகழ் மேருகிரி அளவுமானது என
உரமுமான மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவும் என வாடி முகம் வேறாய்
நலியும் முனே உனது அருண ஒளிவீசும்
நளின இருபாதம் அருள்வாயே!’’
முதற்படைவீடான திருப்பரங்குன்றத்தில் ‘தடக்கை பங்கயம்’ என்று தொடங்கும் திருப்புகழ் ஒன்றைப் பாடியுள்ளார். அப்பாட்டிலே ஆறுமுகக் கடவுளிடம் வேண்டுகின்றார்.
வழங்காத தனவான்களிடம் பல்லைக் காட்டி கையை நீட்டி, பொருத்தமில்லாத புகழுரைகளைக் கூறி மனம் வருந்தும் புலவர்களின் இழிநிலையை மாற்றி அவர்களை உன் பாத மலர்களைப் போற்றும் பக்தர்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக் கொண்டு கருணை புரிக! என மனம் உருகிப் பாடுகின்றார். தடக்கை பங்கயம், கொடைக்குக் கொண்டல், தண் தமிழ்க்குத் தஞ்சம் என்று பொருந்தாத பட்டப் பெயர்களை பொருள் பெறுவதற்காகக் கூறும் புன்மை நெறியைப் புலவர்கள் கைவிட வேண்டும்.
``தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல் தண்
தமிழ்க்குத் தஞ்சம் என்று உல கோரைத்
தவித்து சென்று இரந்து உளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரம் தனை ஊசற்
கடத்தை துன்ப மண் சடத்தைத் துஞ்சிடும்
கலத்தைப் பஞ்ச இந்த்ரிய வாழ்வைக்
கணத்திற் சென்றிடம் திருத்தி தண்டையம்
கழற்குத் தொண்டு கொண்டு அருள்வாயே!’’
கஞ்சப் பிரபுக்களை வான் அளாவப் புகழ்ந்து என்ன பயன்? பதுமநிதிக்கு நிகரான கை உடையவன், மேகம் போன்று கைம்மாறு கருதாமல் வழங்கும் வள்ளல், மேலான தமிழ்மொழிக்கு அடைக்கலம் என தவறாகப் புகழும் புலவர்களுக்கு அருணகிரியார் எப்படி பட்டம் கொடுக்கிறார் என்பதை மேற்கண்ட பாட்டில் காணலாம். தளர்ச்சிப் பம்பரம், ஊசற்கடம், துன்ப மண்சடம், துஞ்சிடும் கலம்.
வாழ வேண்டுமே என்பதற்காக புனைந்துரை புகலும் அவல நிலை மாற வேண்டும். கந்தவேள் கருணை எப்படிப்பட்டது என்பதை அண்மையில் வாழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியாரின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று அதி அற்புதமாக நமக்கெல்லாம் தெரிவிக்கின்றது. வாரியார் சுவாமிகள் ஒருமுறை சென்னை கவர்னரைச் சந்தித்தார். அப்போது சென்னை கவர்னராகப் பதவி வகித்தவர் மைசூர் மகாராஜா ஜெய சாமராஜ உடையார் ஆவார். அருள் உரை அரசரிடம் அளவளாவிக்கொண்டிருக்க ஆளுநர் கேட்டார்.
‘முருக உபாசனையில் நீங்கள் மிகவும் சிறந்தவர் ஆயிற்றே!’ குமரக் கடவுளை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன? புன்னகை புரிந்த படியே வாரியார் புகன்றார். கந்த வேலை எந்த வேளையும் வணங்கி பூஜை புரிந்தால், பொன்னும் கிடைக்கும். புகழும் கிடைக்கும் என்றார். ஆளுநர் கேட்டார்; சுவாமிகளே! அதற்கு என்ன ஆதாரம்? ‘‘அருணகிரியாரின் திருப்புகழே அதற்கான சாட்சி’’ என்ற வாரியார் தன் கணீர் குரலில் சந்தத்திருப்புகழ் ஒன்றை சங்கீதமாகப் பாடிக் காட்டினார். வியந்து போன மைசூர் மகாராஜா தன் அன்புப் பரிசாக வாரியாருக்குத் ‘தங்க டம்பளர்’ ஒன்றை வழங்கினார். பெற்றுக் கொண்ட வாரியார் மொழிந்தார்.
பார்த்தீர்களா! முருகன் அருளுக்கு நீங்களே சாட்சியாகிவிட்டீர்கள். தங்க டம்பளர் எனக்குக் கிடைத்தது. பொன் கொடுப்பான் என்பது நிரூபணம் ஆகிவிட்டதே! இச்செய்தி நாளையே தினசரி நாளிதழில் பிரசுரம் ஆகும்! புகழும் கிடைக்கும் என்பது உறுதிதானே! கடவுளை நம்பினோர் கைவிடப்படுவார்களா? திருப்புகழின் நிறைவுப் பகுதியிலே மும்மூர்த்திகளான அயன், அரி, அரன் மூவர்க்கும் தலைமை ஏற்கும் தனிப் பெரும் கடவுளே! திருப்பரங்குன்றம் மேவிய தேவாதி தேவரே! குறவள்ளி மணாளரே! என்று வேலவனின் கீர்த்தியை விவரிக்கின்றார்.
“படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
பணித்துத் தம் பயம் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடும் தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்குமங்
குலத்திற் கங்கைதன் சிறியோனே
குறப்பொற் கொம்பை முன் புனத்திற்
செங்கரம் குவித்துக் கும்பிடும் பெருமாளே!’’
மனிதர்களைப் புகழ்ந்து பாடாதீர்கள் என்னும் இத்திருப்புகழின் கருத்து சுந்தரர் பாடிய தேவாரத்திலும் சிறப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘`தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்மையாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே!’’
இம்மை, மறுமை இருபேறுகளையும் திடமாகத் தந்தருள தெய்வம் இருக்கும் போது சிந்தை கலங்குவது ஏன்? என அருளாளர்கள் நமக்கு அறிவுரை கூறுகின்றனர்.
`‘குறப் பொற் கொம்பைமுன்
புனத்திற் செங்கரம் குவித்துக் கும்பிடும்’’
என்னும் நிறைவு வரிகள் ஆன்மாவுக்கு எளிமையாக முன்வந்து முருகன் சகல நலங்களையும் தருவான் என்பதே பொருளாகும். இகபர சௌபாக்கியம் அருளும் குகப் பெருமானைக் கும்பிட்டுக் குறைகள் நீங்கி வாழ்வோம்!
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்