நன்றி குங்குமம் தோழி
நவீனமயமாக மாறி வரும் உலகத்தில் நம் மக்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும் அதில் சில சறுக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றாக கல்வித்துறை என்கிறார்கள் பெற்றோர்கள். மெக்காலே கல்வி முறையை பயன்படுத்தி பிரீகேஜி, எல்கேஜி என ஆரம்ப காலத்தில் இருக்கும் குழந்தைகள் துவங்கி பட்டப்படிப்பு வரையில் அவர்களின் பாடங்கள், கற்பிக்கும் முறை மட்டுமில்லை அதற்கான கட்டணமும் உயர்ந்துதான் வருகிறது. உணர்வுபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தெரிந்து கொள்ள வேண்டிய கல்விக்கான கட்டணம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதனால் ஏற்படும் சில பின்விளைவுகளை யாரும் கருத்தில் கொள்வதில்லை.
உயர்தர கல்வி என பெரிய பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள், அவர்களின் மனநிலையை கவனிக்க தவறி விடுகின்றனர். இதனால் சில குழந்தைகள் விபரீதமான முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். பாதிப்பு பெற்றோர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை சார்ந்தவர்களுக்கும்தான். இதற்கெல்லாம் மாற்று வழியாக இயற்கை சார்ந்த, பாடப் புத்தகங்கள் அல்லாது முழுவதும் செயல்வழி முறையில் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட கற்றுத்தரும் ஓர் இயற்கை வழி பள்ளியை நடத்தி வருகிறார் தருமபுரியைச் சார்ந்த மீனாட்சி அம்மா. ‘‘நம்ம சின்ன வயசுல ‘மை ட்ரீம்’ தலைப்பில் கட்டுரை எழுத சொல்லி நம்ம ஆசிரியர்கள் சொல்லுவாங்க. எல்லோரும் டாக்டர், என்ஜினியர், நர்ஸ், விஞ்ஞானின்னு எழுதுவாங்க.
நான் என் கனவு பள்ளியை நினைத்துதான் எழுதினேன். அப்போதிலிருந்தே எனக்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கணும் என்ற எண்ணம் இருந்தது. பாடப் புத்தகங்கள், தேர்வு என்று இல்லாமல், முற்றிலும் இயற்கை, நம் அன்றாட வாழ்வியல் குறித்த பாடங்கள் அதில் இடம் பெற வேண்டும் என்றுதான் விரும்பினேன். அதற்கான வழிமுறைகளை தேடினேன். பொதுவா பள்ளிகள் பாடங்கள், தேர்வுகள், அதனுடைய முடிவுகள் என வரும்போது குழந்தைகள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகுறாங்க. அதில் சிலர் தற்கொலை போன்ற சில விபரீதமான முடிவுகளையும் எடுக்குறாங்க. இதையெல்லாம் என்னால் முடிந்த அளவிற்கு மாற்றி குழந்தைகளை ஒருவித நேர்மறையான எண்ணத்துடன் பயணிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன்’’ என பேசத் துவங்கிய மீனாட்சி அம்மா, நாம் கல்வி கற்றுக் கொள்ளும் முறையை விளக்குகிறார்.
‘‘பொதுவா மாணவர்களிடையே ஒருவிதமான போட்டி இருக்கும். யாரு முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று. அவர்கள் அதில் மட்டும்தான் தங்களின் முழு கவனத்தை செலுத்துவார்களே தவிர, பாடங்களை யாரும் உணர்வுபூர்வமா கற்றுக் கொள்வது இல்லை. இயற்கையுடன் ஒன்றி நாம் பாடங்களை படிக்கும் போதுதான் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு பகுதியா, இங்கிருக்கும் மாணவர்களிடம் ஒரு சர்வே நடத்தினோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் எப்படி இருந்தது.? இப்போ எப்படி இருக்கு? என கேட்டோம். அப்படி போகும் போது, இந்த சர்வே எடுப்பதால், எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்னு கேட்டாங்க. அப்போது அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்ட போது, ேபாதிய தண்ணீர் வசதி இல்லைன்னு சொன்னாங்க.
அவர்களின் பிரச்னைக்கான தீர்வுதான் நாங்க மேற்கொண்ட ‘நாகவதியை தேடி’ திட்டம். இதன் மூலம் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு, அதன் பயன்கள், எவ்வாறு அதனை செயல்முறை படுத்தலாம் என பல்வேறு முறைகளில் விளக்கமளித்தோம். மக்களும் அதனை புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிக்க எங்களின் அந்த திட்டம் ெவற்றியும் கண்டது’’ என்றவர், மற்ற பள்ளிகளில் இருந்து புவிதம் பள்ளி எவ்வாறு வேறுபடுகிறது என்பதனையும் விளக்குகிறார்.
‘‘அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்களை எழுத வேண்டும், அதில் உள்ள வினா விடைகளை படிக்க வேண்டும் என்பதுதான் மையமாக இருக்கும். அதைக் கொண்டு விதை விதைத்தல், செடி நடுதல், பராமரித்தல், கிராஃப்ட் வேலைகள் என கூடுதலாக சொல்லிக் கொடுப்பார்கள். அவங்க எதையெல்லாம் கூடுதல் வேலையா சொல்லித் தருகிறார்களோ அதுதான் எங்க பள்ளியில் முக்கிய பாடமாக நாங்க பயிற்றுவிக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் அதை விட அதிகமா கால்நடைகளை பராமரிப்பது, துணிகள் தைப்பது, அன்றாடம் உபயோகிக்கும் சோப், டால்கம் பவுடர் தயாரிப்பது, உபயோகப்படுத்தப்பட்ட துணிகள் மூலம் பைகள் தயாரிப்பது போன்றவற்றை நாங்க முதன்மையாகச் சொல்லித் தருகிறோம்.
எங்களுடைய பள்ளியில் ஏழாம் வகுப்பு வரையுள்ளது. ஆறாம் வகுப்பு வரை நாங்க பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை. முற்றிலும் இயற்கை வழி கற்றல் முறைதான் இருக்கும். அதற்காக தான் அவர்களுக்கு நாங்க மெக்காலே கல்வி முறையை எங்க பள்ளியில் கொண்டு வரவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு போக வேண்டும் என்பதால், ஏழாம் வகுப்பில் பாடப் புத்தகங்களை அறிமுகம் செய்தோம். எட்டாம் வகுப்பிற்கு அவர்கள் ரெகுலர் பள்ளிக்கு சென்று படிப்பார்கள்.
இதுவரை எங்க பள்ளி பசங்களை நாங்க எந்தவொரு போட்டிகளுக்கும் வெளி பள்ளிகளுக்கு அழைத்துக் கொண்டு போனதில்லை. ஒரு குழந்தையின் தனித்திறமைகளை வெளிப்படுத்ததான் போட்டிகள். அதில் முதல் இடத்தினை பிடிப்பவர்கள்தான் திறமைசாலிகள் என்பதில்ைல. அனைவருக்குமே திறமைகள் உண்டு. அதேபோல்தான் எங்க பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் ஒரு தனித்திறமையுண்டு. எங்களுக்கு அனைத்து குழந்தைகளும் சமம்தான்.
ஆரம்பத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு அனுப்ப பயந்தாங்க. அதனால் முதல் ஒரு வாரம் இங்கு பள்ளியில் என்ன பாடங்கள் நடத்தப்படுகிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்களை ஒரு வாரம் பள்ளியில் அனுமதித்தோம். அதன் மூலம் குழந்தைகள் என்ன கற்றுக்ெகாள்கிறார்கள், அவர்களை நாங்க நடத்தும் விதம், பாடங்களின் செயல்முறை என அனைத்தையும் புரிந்து கொள்வாங்க.
அது அவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த நம்பிக்கைதான் தற்போது குழந்தைகள் இங்கு படிக்க காரணம். இங்குள்ள குழந்தைகள் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் குழந்தைகள் படிக்க வருகிறார்கள். அவர்களுக்கு ஹாஸ்டல் வசதியும் உண்டு. இங்கு தங்கும் குழந்தைகள் தங்களின் துணிகளை துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது, அவர்களின் தேவையினை பார்த்துக்கொள்வது என யாரையும் சார்ந்து இருக்க மாட்டாங்க. பிறந்த குழந்தைகள் தங்களின் கை, கால்களை அசைக்க யாரிடமும் கற்றுக்கொள்வதில்லை. அதுபோலதான் இங்கு இருக்கும் குழந்தைகளும் தானாகவே நிறைய விஷயங்களை சுயமா சிந்தித்து கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இதன் மூலம் பாடங்களை தாண்டி பல விஷயங்களை அவர்களால் கற்றுக்கொள்ள முடிகிறது.
இங்கு பசங்க ஒவ்வொரு விஷயத்தையும் அவங்களாகவே கற்று, செய்து பார்த்து தெரிந்து கொள்வாங்க. சில பெரியவர்கள் சங்கடப்படும் விஷயங்கள் கூட, குறிப்பா, ஆண், பெண் என பாலினம் சம்பந்தப்பட்ட பாடங்களையும் எளிமையா கதை பேசுவது போலவும், அவர்களுக்கு புரியும்படியாக சொல்லிக் குடுத்தோம். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பற்றியும் பசங்களுக்கு சொல்லிக் குடுப்போம். அதன் மூலம் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பதையும் பசங்க புரிஞ்சி நடந்துக்கணும்னு சொல்லுவோம்.
உதாரணத்திற்கு தோட்ட வேலைகளை சொல்லி கொடுக்கும் போது, அவர்கள் நடும் மரம் அல்லது செடியின் பண்புகள் என்ன? அதன் பயன்பாடு குறித்தும் சொல்லி தருவோம். இன்னும் தெளிவா சொல்ல வேண்டுமானால், அந்த செடியில் இலையின் வடிவம், என்ன நிறத்தில் பூக்கள் பூக்கும், செடியினை தாக்கும் பூச்சிகள், காய், பழம் என அனைத்தும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வாறு பூச்சி அரிக்கப்பட்ட செடிகளுக்கு பஞ்சகவ்யம் தெளிப்பது குறித்து மறுநாள் செயல்படுத்துவோம்.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான செயல்முறை பள்ளி. அவர்கள் அதன் வழியில்தான் பாடங்களை படிக்கிறாங்க’’ என்ற மீனாட்சி அம்மா ஏழு மாணவர்களுடன் ஆரம்பித்த தன் பள்ளியில் தற்போது பல மாணவர்கள் படித்து வருவதாக தெரிவித்தார்.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்