Sunday, April 14, 2024
Home » உபியில் யோகி, மோடி ஆட்சிக்கு கடும் எதிர்ப்பலை: 40 தொகுதிகளை பாஜவிடமிருந்து மீட்போம்: சமாஜ்வாடி தலைவர் நம்பிக்கை

உபியில் யோகி, மோடி ஆட்சிக்கு கடும் எதிர்ப்பலை: 40 தொகுதிகளை பாஜவிடமிருந்து மீட்போம்: சமாஜ்வாடி தலைவர் நம்பிக்கை

by Ranjith

எட்டாவா: உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ராம் கோபால் யாதவ் கூறியதாவது: உத்தரப்பிரதேசத்தில் மாநில மற்றும் ஒன்றிய பாஜ அரசுகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பலை நிலவுகிறது. எனவே, இந்தியா கூட்டணியின் வெற்றி இங்கு சிறப்பாக இருக்கும். கடந்த முறை பாஜ வென்றதில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை நாங்கள் இம்முறை கைப்பற்றி வெற்றி பெறுவோம்.

அவர்கள் (பாஜ) ஊழலை ஒழித்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால், தேர்தல் பத்திரம் மூலம் நடந்ததைப் போன்ற மாபெரும் ஊழல் உலகில் வேறெங்கிலும் நடந்ததில்லை. அமலாக்கத்துறை ரெய்டு விடுகிறார்கள். நன்கொடை வந்து விட்டால் சோதனையை நிறுத்துகிறார்கள். இதுபோல வேறெந்த நாட்டிலும் நடந்தால், நன்கொடைகளுக்காக அரசு ஒப்பந்தங்களை தாரை வார்த்த அரசாங்கம் நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும்.

அமலாக்கத்துறையும், சிபிஐயும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும். பாஜவில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது. உபியில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார். ஆனால் 50,000 போலீஸ் பணிக்கு 68 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த வேலையையும் தர விரும்பாத மாநில பாஜ அரசு அவர்களே வினாத்தாளை கசியவிட்டு, தேர்வை ரத்து செய்கின்றனர்.

இப்போதெல்லாம், ராமர் கோயிலுக்கு யார் அதிக மக்களை அழைத்துச் செல்கிறார்களோ அவர்களுக்கு பாஜவில் சீட் தரப்படுகிறது. எனவே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், அதிக மக்களை ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்தால் பாஜவில் சீட் பெற்று விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் உபியில் 80 இடங்களில் பாஜ 62, கூட்டணி கட்சியான அப்னாதளம் 2 என மொத்தம் 64 இடங்களை கைப்பற்றியது. ஒபகுஜன் சமாஜூடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட சமாஜ்வாடி 5 இடங்களில் வென்றது. இம்முறை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து பாஜவை சந்திக்கின்றன.

You may also like

Leave a Comment

ten − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi