ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 97 (பகவத்கீதை உரை)
இந்த இதழிலிருந்து பகவத் கீதை அத்தியாயம் 6 துவங்குகிறது. ‘தியான யோகம்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணன், தியானம் மூலமாக மனதைக் கட்டுப்படுத்தும் முறையையும், வித்தையையும் விரிவாக அர்ஜுனனுக்கு (நமக்கும்) எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு ஸ்லோகமாகப் பார்ப்போம்:
அனாச்ரித கர்மபலம் கார்யம் கர்ம கரோதி யஸ ஸன்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ன
சாக்ரிய (6:1)
`‘அர்ஜுனா, தான் செய்யும் செயல்களில் பலனை எதிர்பாராமல், ஏன், எந்தப் பலனையும் கருத்திலேயே கொள்ளாதவனை சந்நியாசி அல்லது யோகி என்று சொல்வேன். அக்னி வளர்த்து, பல யாகங்களை இயற்று பவனை அவனுடைய அந்தச் செயலை மட்டும் வைத்து யோகி என்று சொல்லிவிட முடியாது. அதேபோல செய்யவேண்டிய கர்மங்களைச் செய்யாது ஒதுங்கிவிடுபவனும் சந்நியாசி அல்ல.’’
துறவு அதாவது சந்நியாசம் என்பது முற்றிலுமாக உலக இன்பங்களைத் துறந்து விடுவது என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், அது துறவல்ல. வாழ்வியல் தர்மத்திலிருந்து ஒதுங்குவது சந்நியாசமல்ல. அந்தக் கடமைகளை நிறைவேற்றாமல் ‘பற்றற்றவன்’ என்று சொல்லிக் கொள்பவனும் யோகியல்ல. அப்படிப் பார்த்தால், குடும்பக் கடமைகளை உணர்ந்து கொள்ளாமல், தன் பொறுப்புகளை மேற்கொள்ள விரும்பாமல், வேலை வெட்டி இல்லாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் யோகி என்று சொல்ல முடியுமா? ‘ஜடம்’ என்று வேண்டுமானால் வர்ணிக்கலாம். அசைவற்று கிடக்கிற கல் அல்லவா அவன்!
அர்ஜுனனும் ‘தப்பித்தல்’ உத்தியால் தானும் யோகியாகி விடலாம் என்று கருதுகிறான் போலிருக்கிறது. ‘பலனில் விருப்பம் வைக்காமல் ஆனால் கட்டாயம் செயலில் ஈடுபடுபவனை நான் சந்நியாசி என்கிறேன்,’ என்கிறார் கிருஷ்ணன். ‘சந்நியாசி கோலம்’ என்பார்கள். மழித்தல் காணா முகமுடியும், சடைகோத்த ஜடா முடியும், சிக்கன உடையும், அழுக்கேறிய உடலும், வெறித்த பார்வையும் என்று தோற்றத்தால் மட்டுமே சிலர் இவ்வாறு சந்நியாசிகளாக இருப்பார்கள். ஆனால் கிருஷ்ணன் காட்டும் பரிமாணம் வேறு. வெளித் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உள்ளே, ஆன்மாவின் கோலம் எப்படி இருக்கிறது என்று பார் என்கிறார். உடம்புக்கு வெளியே போட்டுக் கொள்ளும் வேஷத்தைவிட, உடம்புக்குள்ளே ஏற்றுக் கொள்ளும் மாற்றம்தான் முக்கியமானது.
கர்மங்களைத் துறப்பது துறவு அல்ல; அது பொறுப்பற்ற தன்மை. ஐந்தாறு குழந்தைகள் பெற்றவன் இல்லறத்தைத் ‘துறந்து’ சந்நியாசத்தை நாடுகிறான் என்றால் அவன் ஒரு எஸ்கேபிஸ்ட். அவனே இல்லறத்திலேயே துறவறத்தைக் கடைபிடிக்கிறானா, அவன்தான் ஞானி, யோகி. இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையால் தனக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிட வேண்டும் என்ற ஏக்கம் வலுப்பெறுகிறது. காலையில் அலுவலகத்துக்கு வந்துவிட்டு, மாலையில் வீடு திரும்புவதற்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது என்ற ரீதியில்தான் பொறுப்பற்ற தன்மை வளர்கிறது. அதனால்தான் பல அலுவலகங்களில் டார்கெட் நிர்ணயிக்கிறார்கள். இன்ன தேதிக்குள், இன்ன விஷயம் முடிய வேண்டும் என்று தம் ஊழியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள், நிர்ப்பந்திக்கிறார்கள்.
இவ்வாறு எளிதாக இலவசங்கள் கிடைக்கும்போது அதைப் பாதுகாத்துக் கொள்ள மனசு உடன்படாது. ‘சும்மா கிடைத்ததுதானே!’ என்ற அலட்சிய உணர்வு அவ்வாறு கிடைத்தவற்றை ஆடம்பரமாக, யாருக்கும் உதவாத வகையில், தனக்கே உடல்நலக் கேட்டை உருவாக்கிக் கொள்ளும் வகையில் செலவழிக்கிறது. பொதுவாகப் பலர் கர்மாக்களில் ஈடுபடுகிறார்கள்; அதாவது செயல் புரிகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அவ்வாறு செயல்படாவிட்டால், தமக்குப் பலன் கிடைப்பதில்லை என்பதால்தான். செயலுக்கு ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும்தான். அதே சமயம், எந்தப் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுவது என்பதும் இன்றைய உலகில் சாத்தியமே இல்லைதான்!
ஆனால் செயல்படுவதை நிறுத்தாதே, அதேசமயம் அதற்கான பலனையும் எதிர்பார்க்காதே என்று கிருஷ்ணன் சொல்வதும் சாத்தியமில்லைதானே? ஆனால் ஒரு செயல் மூலம் பலன் கிடைத்து விட்டால், நாம் உடனே அடுத்த செயலில் இறங்குகிறோம் – இதற்கும் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையில், எதிர்பார்த்தலில். அல்லது ஒரே செயலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம், குறிப்பிட்ட இடைவெளியில் அதற்கான பலன் கிட்டும் (மாத சம்பளம் மாதிரி) என்ற எதிர்பார்த்தலில்.
ஆனால் நாம் விரும்புவது கிடைத்து விட்டால், செயலில் என்ன ஆர்வம் இருக்கப் போகிறது? இப்படி செயலற்றுப் போவதுதான் சந்நியாசமா? ஆனால் நம் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு உழைப்பு அவசியமாகிறது. அதாவது செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக நம் தேவை பூர்த்தியானால் நாம் முற்றிலுமாக அமைதியடைந்து விடுவதில்லை; காரணம், அது அவசியமோ இல்லையோ, அடுத்த தேவை தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது.
தேவை பூர்த்தியாகும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத செயலே, கர்மாவே உயர்ந்தது, அதுதான் சந்நியாசத்தனம் என்பது கிருஷ்ணனின் வாதம். ஏனென்றால் எதிர்பார்த்தலில் ஏமாற்றமும் கிட்டலாம் அல்லவா? அப்படியே ஏமாற்றம் உண்டாகுமானால், அதனால் சோர்வடையாமல் தொடர்ந்து கர்மாவை இயற்றுகிறோம் என்றால், அதுதான் உண்மையான சந்நியாசத்தனம் என்கிறார் கிருஷ்ணன். விருப்பம் வைப்பதனாலேயே ஆசைகள் பூர்த்தியாகிவிடுகிறதா என்ன என்று கேட்கிறார் அவர்.
காற்றைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பும் ஒருவர், தன் உள்ளங்கையை விரல்களால் இறுக மூடிக் கொண்டு உள்ளே காற்று இருக்கிறது என்று சொல்வது மூடத்தனம் அல்லவா? எவ்வளவுக்கெவ்வளவு கையை இறுக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு, தன் இயல்புப்படி காற்று வெளியே போய்விடுவதுதான் உண்மை. பிரித்த கையில் தங்கும் காற்றைவிட, இறுக மூடிய கையில் நிற்கும் காற்று வெகு குறைவே! ஆகவே விரித்த கைகளுடன் நடைபோடு, இறுக்காதே என்பதுதான் கிருஷ்ணனின் அறிவுரையாக இருக்கிறது – ‘நாளையைப் பற்றிய விருப்பத்தில் இன்று வாழாதே, இன்று முழுமையாக வாழ முடியுமா என்று மட்டும் பார்.’
மனதில் சாந்தி நிலவ வேண்டும் என்று எதிர்பார்த்து, விருப்பப்பட்டு, ஒருவன் குடும்பத்தைத் துறந்தாலும், அந்த விருப்பத்தின் காரணமாக அவன் எங்கு போனாலும் குடும்பஸ்தனாகவே இருக்கிறான். அவனே வீட்டிலிருந்தபடியே எந்த விருப்பமும் கொள்ளாதவனாக இருந்தால் சந்நியாசியாகிறான்! குடும்பத்தைத் துறந்து, ஆசிரமம் அமைத்துக் கொண்டு, குடும்பத்தில் வாழ்ந்ததுபோலவே உணவு, உறக்கம் என்று கொள்வதில் சந்நியாசத்தனம் என்ன இருக்கிறது?
இந்த ஸ்லோகம் சொல்லப்பட்ட காலத்தில் அக்னிக்குத் தனி முக்கியத்துவம் இருந்தது. ‘நிரக்னிர்ன’ என்கிறார் கிருஷ்ணன். அதாவது அக்னியாலேயே அன்றைய உலகம் இயங்கி வந்தது. இயல்பான வாழ்க்கைக்கு அக்னி அத்தனை அத்தியாவசியமாக இருந்திருக்கிறது. கற்கால மனிதனுக்கு நாகரிகம் சொல்லிக் கொடுத்ததே அக்னிதான். இருட்டை விரட்டுதல், சுட்ட அல்லது அவித்த உணவை உட்கொள்ளுதல் என்று ஆரம்பித்து, யாகம் இயற்றுதல் என்ற அளவுக்கு அக்னியின் தேவை இருந்தது.
அதாவது தற்காலத்திய எந்திரங்களைப் போல! இப்போது எந்திர உபயோகமின்றி நம்மால் வாழ இயலுமா? அதேபோல அன்று அக்னியின்றி வாழ்க்கை இல்லை; ஆனால் அக்னி இல்லாவிட்டால், கற்கால நாகரிகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பதும் உண்மைதான். அக்னி அல்லது எந்திரங்களுக்கான தேவை இருந்தாலும், அதை உபயோகப்படுத்துவதால் கிட்டும் பலனில் நாட்டம் கொள்ளாதே என்கிறார் கிருஷ்ணன்.
கிருஷ்ணனைப் பொறுத்தவரை இந்த யுத்தமும் சந்நியாசம்தான்! ‘‘விருப்பு – வெறுப்புகளை புதைத்துவிடு, வெற்றி – தோல்வியை எதிர்பாராதே, செயலாற்று, யுத்தம் புரி‘‘ என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார்.
யம் ஸந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்யஸந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சன (6:2)
‘‘ஆகவே, அர்ஜுனா, சந்நியாசம் என்று நான் குறிப்பிடுவதுதான் யோகம் என்பதை நீ புரிந்து கொள். ஏனென்றால் எந்த கர்மத்துக்கும் சங்கல்பம் கொள்பவன் ஒருபோதும் யோகியாவதில்லை.‘‘
முதலில், ‘சங்கல்பம்‘ என்றால் என்ன? ஒரு கோயிலுக்குப் போகிறோம். அர்ச்சகரிடம் அர்ச்சனைத் தட்டைக் கொடுக்கிறோம். அவர் நம்முடைய கோத்ரம், நட்சத்திரம், பெயர் எல்லாம் கேட்கிறார். பிறகு, ‘சங்கல்பம் பண்ணிக் கொள்ளுங்கள்,‘ என்று நம்மைக் கேட்டுக் கொள்கிறார். அதாவது ‘இப்போது நீங்கள் இந்த இறைவனுக்குச் செய்யும் அர்ச்சனையின் பலனாக என்ன விளைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதை உங்கள் மனசுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்,‘ என்று அர்த்தம்!
‘கோ’வைப் போற்றித் துதித்தால் உடனே சம்பாவனை கிடைத்து விடும் – பொற்கிழியாகவோ, பணமாகவோ, பொருளாகவோ! ஆனால் இந்தக் கோயிலில் உறையும் ‘கோ‘வை அர்ச்சனை செய்தால் நம் சங்கல்பம் உடனே நிறைவேறி விடாது. ஏனென்றால் நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் சங்கல்பம் சில சமயங்களில் நம் தகுதிக்கும் மீறியதாகவே இருக்கிறது! ஆகவே பொறுத்திருக்க நாம் தயார். ஆனால் அந்த சங்கல்பம் கட்டாயம் நிறைவேறத்தான் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், கடவுளிடம் ஆணை தொனியில் கோரிக்கையும் வைக்கிறோம்!
கிருஷ்ணன் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொள்ள இது நல்ல உதாரணம். கடவுள் நாமத்தைப் புகழுவது நமக்கு இந்தப் பிறப்பை அளித்து, இந்த அளவுக்கு நாம் வளர உதவி செய்திருக்கிறாரே, அதற்கு நன்றி சொல்லத்தான். மேலும், மேலும், அவரிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்டுத் தொந்தரவு செய்வதற்கல்ல! அதனால்தான் அவர் அளிப்பதெல்லாம் நமக்கு முன்கூட்டியே தெரிவதில்லை. அதாவது நாம் எடுக்கும் முயற்சியின் பலன் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிவதில்லை, இல்லையா, அதுபோல!
ஆகவே, எந்த பலனையும், எத்தகைய பின்விளைவையும் எதிர்நோக்காமல் கர்மாவை இயற்றுவதுதான் ஒரு யோகியின் யோக்யதாம்சம். அதாவது சந்நியாசத்தில் சங்கல்பம் துறக்கப்படுகிறது; சங்கல்பம் இல்லாத கர்மாதான் யோகம். இப்படிப் பார்த்தால், கர்மபல சந்நியாசமும், கர்மயோகமும் ஒன்றே!உதாரணத்துக்கு சூதாடுபவனை எடுத்துக் கொள்ளலாம். இவனுடைய சங்கல்பம், சூதாட்டத்தில் ஜெயித்து நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
அதற்காக அவன் பணயம் வைப்பதற்கு, இழப்பதற்கும் தயாராகவே இருக்கிறான். இழப்புகள் கூடக்கூட அவனுடைய சங்கல்பம் தீவிரமடைகிறது. தோல்வியை அவன் விரும்புவதில்லை – தோல்விதான் அவனைப் பொறுத்தவரை சூதாட்டத்தின் பலன் என்றாலும்!
தர்மரே அப்படித்தானே! இப்படி ஒரு குருக்ஷேத்திர போருக்கு அவருடைய சூதாட்ட வெறியும், சங்கல்பமும்தானே காரணம்! சொந்த, பந்தம், உரிமை என்று எல்லா வரம்புகளையும் மீறி அவர் பணயம் வைத்தவைதான் எத்தகையவை! உயிரோடும், உடலோடும் சொந்த சகோதரர்களை, மனைவியை, கொஞ்சம்கூட கூச்சமோ, குற்ற உணர்வோ கொள்ளாமல் பணயம் வைத்தாரே! இது அவருடைய சங்கல்பம் அவர் மீது கொண்டிருந்த ஆதிக்கம்தானே! சங்கல்பம், பிடிவாதமாகி விட்டதன் விளைவுதானே!
சங்கல்பம் அதாவது இச்சை நம்மை ஆட்சி செய்யும்வரை நம்மால் மீள முடியாது. இச்சையைத் துறப்பதுதான் ஒரு யோகியின் குணம். ‘நான் ஆசைதானே பட்டேன், பேராசைப் படவில்லையே!’ என்று நம் இச்சையின் பரிமாணத்துக்கு ஓர் அளவுகோல் வைத்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஆபத்து எங்கே ஆரம்பிக்கிறது என்றால், நிறைவேறாத இச்சையை அகங்காரம் ஆக்கிரமிக்கும்போதுதான். இதுதான் இச்சையைப் பசுமையாக வைத்திருக்கிறது, வாட விடாது!
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்