சேலம்: ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி இரவு 9 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் ஜங்சனுக்கு இரவு 9.57 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, 10 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 3.40 மணிக்கு சென்னை சென்றடையும். நேற்றிரவு 9.01 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பிய ரயில், சங்ககிரிக்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இரவு 9.33 மணிக்கு புறப்பட்டது. மாவேலிபாளையத்தை கடந்து, மகுடஞ்சாவடி அருகே வந்தபோது ரயில் இன்ஜினின் சக்கரத்தில் மர்மபொருள் சிக்கி தரதரவென இழுத்துச் சென்றது. இதனால் லோகோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தி கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சேலம் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு, லோகா பைலட் தகவல் கொடுத்தார். இச்சம்பவத்தால் ரயில் இன்ஜின் பழுதாகி, தொடர்ந்து இயக்க முடியாது என்ற தகவலையும் தெரிவித்தார்.
இதனையடுத்து, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளும் சேலம் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பாபு, இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். சம்பவம் நடந்த இடம், ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், அங்கிருந்து இன்ஸ்பெக்டர் பிரியா சாய் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, ஏற்காடு எக்ஸ்பிரஸை கவிழ்க்கும் நோக்கத்தோடு பெரிய அளவிலான 10 அடி நீளம் உள்ள உடைந்த தண்டவாள துண்டை, டிராக்கின் குறுக்கில் வைத்திருப்பது தெரிந்தது. அந்த இரும்பு துண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சேலத்தில் இருந்து மாற்று இன்ஜின் மகுடஞ்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, இரவு 11.45 மணிக்கு அங்கிருந்து ரயில் புறப்பட்டது. இதன்காரணமாக சுமார் 2 மணிநேரம் பரபரப்பு நிலவியது.
ரயிலில் பயணித்த ஐகோர்ட் நீதிபதிகள்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சதீஷ்குமார், கிருஷ்ணன், ராமசாமி, இளந்திரையன், கல்யாணசுந்தரம் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். இவர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சந்திரசேகர் ஆகியோரும் பயணம் செய்தனர்.