*ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
ஜோலார்பேட்டை : ஏலகிரிமலையில் நேற்று நடந்த கோடை விழாவை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படுகிறது.
இது தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த இடம் 4 மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழிலாக காட்சியளிக்கிறது. இதனால் அதிகளவு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் 2 நாள் கோடைவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2018ம் ஆண்டு கோடைவிழா நடந்தது.
தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளாக கோடைவிழா நடத்தப்படவில்லை.இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏலகிரிமலையில் கோடைவிழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சிவசவுந்தரவல்லி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூர்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கோடை விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் எஸ்பி ஸ்ரேயாகுப்தா, டிஆர்ஓ நாராயணன், சுற்றுலா அலுவலர் ஆனந்தன், வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் இயற்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி மற்றும் ஏலகிரிமலை படகு இல்லத்தில் மகளிர் திட்ட கண்காட்சி, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இதில் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நாட்றம்பள்ளி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீகீர்த்திராஜன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று ஒருநாள் மட்டும் நடந்த இந்த கோடை விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் திரளாக கலந்துகொண்டு பல்வேறு கண்காட்சிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதனால் ஏலகிரி மலை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.