நாம் இந்த நாமத்திற்கு முந்தைய மூன்று நாமங்களான சிவ காமேஸ்வர அங்கஸ்தா, சிவா, ஸ்வாதீன வல்லபா… போன்ற நாமங்களில் சிவசக்தி சம்மந்தத்தை பார்த்துக்கொண்டே வந்தோம். ரூப சாமரஸ்யம், நாம நாமரஸ்யம், அதிகார சாமரஸ்யம் போன்றவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தோம். இந்த நாமத்தில் அதாவது ஸூமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்ற
நாமத்தில் லலிதா திரிபுரசுந்தரி என்கிற அந்த பரம வஸ்துவினுடைய ஸ்தானத்தை, அது இருக்கக்கூடிய இடத்தை இந்த நாமம் காட்டிக் கொடுக்கின்றது. காலம், இடம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்று சொன்னால்கூட எப்போது தன்னுடைய நிர்குண நிலையிலிருந்து… அதாவது நாமரூபமற்ற நிலையிலிருந்து நமக்காக சகுண நிலைக்கு வருகிறதோ, அதற்கேற்றாற் போல் இடம் காலம் எல்லாமே நமக்காக ஏற்றுக்கொள்கிறது.
அந்த பரமவஸ்து ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ நமக்காக காலதேச வர்த்தமானத்தையும் ஏற்றுக் கொள்கிறது. அதனால்தான் நாம் ஒரு இடத்தை கோயிலை சுட்டிக் காட்டி அங்கு அம்பாள் இருக்கிறாள் என்கிறோம். அம்பாள் எங்கேயும் இருக்கிறாள். ஆனால், மதுரையில் மீனாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, காசியில் விசாலாட்சியாக, திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக இருக்கிறாள். நம்மீது இருக்கக்கூடிய கருணையினால் அவள் ஏற்றுக்கொள்கிறாள். எல்லா காலங்களுமே அம்பாளுக்குரிய காலங்கள்தான். ஆனால், விசேஷமான காலங்களாக நவராத்திரி… அந்த நேரத்தில் விசேஷமான ஆராதனைகள். வாராஹி நவராத்திரி மாதங்கி நவராத்திரி லலிதா நவராத்திரி எத்தனையோ ஆராதனை செய்யக்கூடிய இந்தந்த காலங்கள் என்று நம் பொருட்டு இவை யாவற்றையும் அம்பாளே ஏற்றுக் கொள்கிறாள்.
எனவே, இந்த நாமத்தில் நம்பொருட்டு ஸ்தானத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்த நாமாவான ஸூமேரு மத்ய ஸ்ருங்கஸ்தாவும், இதற்கு அடுத்து வருகிற ஒவ்வொரு நாமங்களுமே அந்த ஸ்தானத்தை இன்னும் நெருக்கத்தில் கொண்டுபோய் காட்டுகிறது. இதற்கு அடுத்து வரக்கூடிய நாமங்களான ஸ்ரீ மன் நகர நாயிகா, சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா என்றெல்லாம் அடுத்தடுத்து வரப்போகிறது. இப்போது அம்பாள் இருக்கக்கூடிய இடத்தை இங்கு எப்படி காட்டிக் கொடுக்கிறார்கள் எனில், மேலேயிருந்து aerial shot அல்லது பறவைப் பார்வையில், ட்ரோன் ஷாட் என்றெல்லாம் வைக்கிறார்கள் அல்லவா… என்பதுபோல ஸூமேரு மத்ய ஸ்ருங்கம்… என்று விரிந்த பார்வையில் நமக்குக் காண்பித்துக் கொடுக்கிறார்கள். இன்னும் நெருக்கமாக அந்த ஸூமேரு மத்ய ஸ்ருங்கத்தில் எங்கு இருக்கிறாள் எங்கு இருக்கிறாள்.
இதற்கு அடுத்த நாமத்தில் அந்த ஸ்ரீ மந் நகர நாயகி… என்றும், ஸ்ரீ நகரத்திற்குள் எங்கு இருக்கிறாள். அந்த ஸ்ரீ நகரத்திற்குள் எப்படி இருக்கிறாள் என்று இனி ஒவ்வொன்றாக வருகிறது.
இதில் ஸூமேரு என்று முதல் வார்த்தை வருகிறது. இந்த ஸூமேரு என்றால் என்னவென்று பார்ப்போம். நம்முடைய சாஸ்திரங்களிலும் சரி, ஸ்ரீ வித்யாவிலும் சரி இந்த ஸூமேருவிற்காக விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக லலிதா ஸ்தவ ரத்னம் என்று துர்வாச மகரிஷியால் எழுதப்பட்டது. அதில்தான் கொடுக்கப்படுகின்றது. குரோத பட்டாரகர் என்று சொல்லப்படக்கூடிய துர்வாசர் செய்த நூல்தான் லலிதா ஸ்தவ ரத்னம். அந்த லலிதா ஸ்தவ ரத்னத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் ஆர்யா த்விசதி. ஏனெனில், இருநூறு ஸ்லோகங்கள். அதனால், த்விசதி. ஆர்யா என்கிற சந்த்ஸில்… ஆர்யா என்கிற விருத்தத்தில் செய்திருக்கிறார். ஆர்யா மீட்டர் என்று சொல்கிறோமல்லவா அதில் செய்திருக்கிறார். இதுவொரு காரணமாக இருந்தாலும் அம்பாளுக்கு ஆர்யா என்றொரு பெயர் உண்டு. அதனாலேயே இந்த நூலுக்கு ஆர்யா த்வீசதி என்று பெயர்.
இந்த நூலில் முதலில் கணபதியை ஸ்துதி செய்துவிட்டு, இரண்டாவது ஸ்லோகத்திலேயே அவர் எதைப்பற்றி சொல்கிறார் எனில், இந்த ஸூமேரு பற்றித்தான் சொல்கிறார். இந்த மொத்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எல்லாவற்றையும்… ஏன், இந்த சூரிய சந்திரன் என்று எல்லாவற்றையும் நிலைநிறுத்திக் கொண்டு இந்த பிரபஞ்சத்தின் மத்தியில் ஒரு பர்வதம் இருக்கும். மலை இருக்கிறது. அது சாதாரண மலை கிடையாது. பொன்மயமான மலை. தங்கமலை. சொர்ண மலை ஒன்று இருக்கிறது. அந்த சொர்ணமலைக்கு பெயர்தான் ஸூமேரு என்று குறிப்பிடுகிறார். அந்த ஸூமேரு எங்கிருக்கிறதெனில், இந்த மொத்த பிரபஞ்சத்திற்கும் நடுவில் உள்ளது. அந்த ஸூமேரு இருப்பதால்தான்… அந்த ஸூமேருவை ஆதாரமாகக்கொண்டுதான் இந்த மொத்த பிரபஞ்சமும் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த சூரிய சந்திராதிகளெல்லாம் அதனதன் இடத்தில் எப்படி வைக்கப்பட்டிருக்கிறதெனில், இந்த ஸூமேருவின் ஆதாரத்தினால்தான் அதனதன் இடத்தில் இருக்கிறது. எப்படி ஒரு சக்கரத்திற்கு அச்சாணி ஆதாரமோ… அதுபோல இந்த மொத்த அச்சாணியாக அந்த ஸூமேரு பர்வதம் இருக்கிறது. இந்த ஸூமேரு பர்வதம் சொர்ண மயமாக… தங்க மயமாக இருக்கிறது என்று சொல்கிறார். ஸூமேரு ஸ்ருங்கஸ்தா… என்று சொல்லியிருந்தால் ஸூமேரு பர்வதத்தில் வசிப்பவள் என்று முடிந்திருக்கும். ஆனால், இங்கு ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்று வர்ணிக்கிறார்கள். ஸ்ருங்கம் என்றால் மலையினுடைய உச்சி. மலையினுடைய முகடு என்று அர்த்தம்.
இமயமலை எடுத்துக் கொண்டால் அதில் இத்தனை உச்சியுள்ளது இத்தனை சிகரம் உள்ளது என்று சொல்வார்கள் அல்லவா… அதுபோல ஸுமேரு மத்ய ஸ்ருங்கம் என்று சொல்லும்போதே… அந்த ஸுமேருவில் எத்தனையோ உச்சிகள் இருக்கும் ஆனால், அதில் ஸுமேரு மத்ய ஸ்ருங்கம் என்று சொல்லும்போது, அந்த மத்தியில் ஒரு ஸ்ருங்கம் உள்ளது. உயரமான ஸ்ருங்கத்தில் அம்பாள் இருக்கிறாள். அதனால் ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா.
எப்படி துர்வாசர் லலிதா ஸ்தவ ரத்னத்தில் ஸுமேருவைப்பற்றிச் சொன்னாரோ அதேபோல, அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார். ஏன், மத்திய ஸ்ருங்கம் என்று சொல்கிறார் என்பதற்கு காரணம் சொல்கிறார்.
துர்வாசர் இந்த ஸ்லோகத்தில் நான்கு உச்சிகள் இருப்பதாக குறிப்பிடுகிறார். அந்த நான்கு உச்சிகளும் எப்படி இருக்கிறதெனில், கிழக்கில் ஒரு உச்சி இருக்கிறது. அடுத்து தென்மேற்கில் ஒரு உச்சி இருக்கிறது. வடமேற்கில் ஒரு உச்சி இருக்கிறது. இப்போது இந்த மூன்றையும் இணைத்தால் ஒரு முக்கோணம் இன்னும் சொல்லப்போனால் தலைகீழாக்கப்பட்ட முக்கோணம் கிடைத்துவிடும். இப்படியான தலைகீழ் முக்கோணத்திற்கு நடுவே, இருக்கக்கூடிய ஸ்ருங்கமானது மற்ற மூன்று ஸ்ருங்கங்களை விட நானூறு யோஜனை உயரமான அளவிற்கான ஸ்ருங்கமாக உள்ளது.
இதை நீங்கள் மேலிருந்து பார்த்தால், தலைகீழான ஒரு முக்கோணத்தை வரைந்து அந்த முக்கோணத்திற்கு மத்தியில் ஒரு புள்ளி வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும். இந்த நடுவே இருக்கக்கூடிய பிந்து ஸ்தானம் என்று சொல்கிறோமல்லவா அதில் அம்பாள் வசிக்கிறாள். அதனால், இந்த இடத்தில் ஸுமேரு மத்யஸ்த ஸ்ருங்கஸ்தா… என்று சொல்கிறோம். ஸுமேரு என்பது மலை. மத்ய ஸ்ருங்கம் என்பது மற்ற மூன்று உச்சிகளுக்கு மத்தியில் இருக்கக்கூடிய உச்சி. அதன் உச்சியில் யார் வசிக்கிறாளோ அவள்தான் ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா.(சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா