Thursday, March 28, 2024
Home » ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம் : 7 ஏக்கர் நெல்லிக்காய் சாகுபடியில்… அசத்தும் தஞ்சை விவசாயி

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் லாபம் : 7 ஏக்கர் நெல்லிக்காய் சாகுபடியில்… அசத்தும் தஞ்சை விவசாயி

by Porselvi

நெல், கரும்பு, வாழை, மா, முந்திரி என்று வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் சாகுபடிகளுக்கு இணையாக நெல்லிக்காய் சாகுபடியிலும் அசத்துகிறார் தஞ்சை மாவட்ட விவசாயி. சரியான முறையில் சாகுபடிகளை மேற்கொண்டால் அனைத்தும் லாபம்தான் என்று பாசிட்டிவ் எனர்ஜி ஏற்றிக் கொண்டு பச்சை பசேல் என்று மின்னும் நெல்லிக்காய்களை சேகரித்துக் கொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார் மருங்குளத்தை அடுத்த குருங்குளம் கிராமத்தை சேர்ந்த உத்திராபதி.‘‘எதை செய்தாலும் அந்த தொழிலில் முழு திருப்தி ஏற்பட வேண்டும். உண்மையான உழைப்பை கொடுத்தால் மண் நம்மை உயர்த்தும். எங்க அப்பா நெல் சாகுபடி செய்து வந்தார். அதுக்குப் பிறகு முந்திரி சாகுபடி அதுக்கு அப்புறம்தான் நான் முழுக்க முந்திரி தோப்புகளை அழித்து விட்டு கடலை, பயறு என்று சாகுபடி செய்து வந்தேன். எதிலும் திருப்தி இல்லைங்க. இன்னும் வேற ஏதாச்சும் செய்யணும்னு மனசுக்குள்ள ஒரே எண்ணம். பல இடங்களுக்கு சென்று மற்ற விவசாயிகள் செய்யற சாகுபடி பற்றி தெரிந்து கொண்டே இருந்தபோதுதான் பளிச்சுன்னு ஒரு ஸ்பார்க் அடித்தது. நெல்லிக்காய் சாகுபடி செய்யலாமே. மக்களுக்கும் நாம ஏதாச்சும் ஒரு விததுலுல நல்லது செய்தது போல் இருக்குமேன்னு நினைச்சேன். நெல்லி சாகுபடி எப்படி செய்யறது. என்ன வகை வளர்க்கிறது. அதோட விற்பனைன்னு பல விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு களத்துல இறங்கினேன். 2002ம் ஆண்டில் தொடங்கினது இப்போ வரைக்கும் சக்ஸஸ்தான். சாகுபடி செய்ய போற நிலத்தை அதுக்கு தகுந்தாற்போல் பண்படுத்தினேன். மொத்தம் 17 ஏக்கர் நிலத்தில் சுமார் 15 ஏக்கர் முழுவதும் நெல்லி கன்றுகள் வைத்தேன்” என்கிறார்.
இவரது அப்பா முந்திரி தோப்பு வைத்திருந்தார். அதற்கு பிறகு முந்திரிக்காடுகளை அழித்து நெல், கடலை, உளுந்து, காய்கறி என பல சாகுபடிகளை செய்து வந்துள்ளார். இப்போ ஒருங்கிணைந்த விவசாயமாக 14 ஏக்கரில் முழுக்க முழுக்க நெல்லிக்காய் சாகுபடி செய்து வருமானத்தை அள்ளுகிறார். அதுமட்டுமா. தென்னை, மிளகு, கொய்யா, எலுமிச்சை, பச்சைமிளகாய், தேன் பெட்டி வைத்து தேனீக்கள் வளர்ப்பு, யானை வெண்டைக்காய், கத்திரிக்காய், சோளம், நார்த்தை என்று ஒருங்கிணைந்த பண்ணையமாக செய்து வருகிறார். தொடர்ந்து பேசிய
உத்திராபதி பல புதிய ரகங்களை பற்றி நமக்கு கூறினார்.

“காஞ்சன், சக்கையா, என்ஏ7, கிருஷ்ணா என்ற ரகங்கள் சாகுபடி செய்தேன். 15க்கு 5 அடிக்கு ஒரு ஏக்கரிலும், 12க்கு 12 இடைவெளியில் 7 ஏக்கரும், 25க்கு 25 அடி இடைவெளியில் 7 ஏக்கர் என கன்றுகளுக்கு இடையே இடைவெளிவிட்டு கன்றுகளை நட்டு பராமரித்தேன். நான் சாகுபடி செய்துள்ள இந்த ரகங்கள் இந்த ஊர் மண்ணுக்கு ஏற்றதாக இருந்ததால் இதை பயிரிட்டேன். இந்த மரங்களுக்கு தேவையான உரங்களை அதுவும் இயற்கையான முறையில் நானே தயார் செய்தேன். இரண்டு மாடுகள் உள்ளது. மாடுகளின் சாணம், கோமியம் மூலம் பஞ்சக்காவியா, புண்ணாக்கு கரைசல் போன்றவற்றின் மூலம் இயற்கையான முறையில் மரங்களுக்கு உரங்களை தயாரித்து பயன்படுத்துகிறேன்.
நெல் சாகுபடியில் அதிக அளவில் நீர் தேவைப்படும். ஆனால் இது போன்ற வறட்சியும் தாங்கி வளரக்கூடிய மரசாகுபடியில் பெரிதளவில் நீர் தேவைப்படாது. இந்த ஒரு சாகுபடியை செய்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நெல்லிகள் கன்று பயிரிடப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்து காய்க்க ஆரம்பிக்கும் ஐந்தாவது ஆண்டில் நன்கு காய்க்கும். எட்டாவது ஆண்டில் அதிக அளவில் காய்க்கும். தற்போது ஒரு ஏக்கரில் எட்டில் இருந்து 10 டன் வரை காய்க்கிறது. வருடத்தில் 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

இந்த நெல்லிக்காய்களை ஒட்டன்சத்திரம், கேரளா போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து விடுகிறேன். எங்களைப் போன்ற நெல்லி விவசாயிகள் போக்குவரத்து செலவு தான் அதிகமாகின்றது. இது மிகவும் சிரமமாகவும் இருக்கிறது. தஞ்சையில் உள்ள உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலையின் மூலம் பெரிய அளவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சிகளை கொடுத்து கிராமப் பகுதிகளிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் பல உணவுப் பொருட்களை தயாரிக்க முடியும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு அரசு உதவ வேண்டும். டிரான்ஸ்போர்ட் செலவு குறைந்தால் இன்னும் லாபம் அதிகம் கிடைக்கும். டிசம்பர், ஜனவரி
ரெகுலர் சீசன். மார்ச், ஏப்ரல் பராமரிப்பு, கார் சீசன் என்றால் ஜூன், ஜூலை. அக்டோபர் அறுவடை. அதிகளவில் காய்கள் கிடைக்கிறது.

அருமையான இந்த நெல்லிக்காய் சாகுபடி நல்ல வருமானத்தை கொடுக்கிறது. இதை இன்னும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றினால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி நெல்லிக்காய் மரங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தேன் பெட்டி வைத்துள்ளேன். இதனால் தேனீக்கள் மகரந்த சேர்க்கையால் அதிகளவு நெல்லிக்காய்கள் கிடைக்கிறது. தேன் கூடுதல் வருமானம், நாவல் மரம், செஞ்சந்தனம், பலா மரம், தேக்கு என்றும் பயிரிட்டுள்ளேன். முக்கியமாக கத்திரிக்காய், யானை வெண்டைக்காய் என்றும் பயிரிட்டுள்ளேன். காய்கறிகள் என் வீட்டுத்தேவைக்கு போக கூடுதலாக கிடைக்கும். மண்ணை நம்பி உண்மையான உழைப்பை கொடுத்தால் அனைத்தும் லாபம்தான். சொட்டு நீர் பாசனம் வைத்துள்ளதால் எனக்கு தண்ணீர் செலவும் மிகவும் குறைவு. நிச்சயம் வருட வருமானம் நெல்லிக்காயில் இருந்து மட்டுமே சராசரியாக ரூ.12 லட்சம் கிடைக்கிறது. அப்போ மாதம் ரூ.1 லட்சம். மற்ற சாகுபடியில் இருந்து கிடைப்பது கூடுதல் வருமானம் தான்,’’ என்றார்.

தொடர்புக்கு :
உத்திராபதி: 81108 06250

பூக்களைக் கிள்ளினால் மகசூல் அள்ளலாம்

கவாத்து செய்தபிறகு, பூக்கும் பூக்களைக் கிள்ளிவிட வேண்டும். 12-ம் மாதம் ஒரு செடிக்கு ஒன்றரை கிலோ மண்புழு உரத்தை அடியுரமாக வைத்துவிட்டு, 13-ம் மாதத்தில் மீண்டும் ஒருமுறை கவாத்து செய்ய வேண்டும். அதேபோல பூக்கும் பூக்களையும் கிள்ளிவிட வேண்டும். 15-ம் மாதம் ஒரு செடிக்கு இரண்டு கிலோ வரை மண்புழு உரம் வைத்து மீண்டும் ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். அதன் பிறகு பூக்கும் பூக்களைக் காய்க்க விடலாம். பெரும்பாலான விவசாயிகள், இரண்டாவது கவாத்துக்குப் பிறகு, பூக்கும் பூக்களைக் காய்க்க விட்டுவிடுவார்கள். ஆனால், மூன்றாவது கவாத்துக்குப் பிறகு, பூக்கும் பூக்களைக் காய்க்கவிட்டால் காய்கள் திரட்சியாகவும், நல்ல மகசூலும் கிடைக்கும்.

கவாத்தில் கவனம்

பூப்பூக்கும் நேரத்தில் அசுவினிப் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் அட்டைகளைத் தொங்கவிடலாம். அத்துடன், 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி அல்லது இஞ்சி-பூண்டுக்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் 5 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். மூன்றாவது முறை பூப்பூக்கத் தொடங்கியதும் 10 நாள்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் பூப்பூக்கும். ஏப்ரல் மாதம்வரை காய் பறிக்கலாம். அதேபோல, ஜூன் மாதம் பூப்பூத்தால் அக்டோபர் வரை காய் பறிக்கலாம். அக்டோபர் மாத பறிப்புக்குப் பிறகு, கவாத்து செய்வது அவசியம். ஆரம்பத்தில் குறைவான மகசூல் கிடைத்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டே செல்லும். கவாத்துக்கு முன்பாக அடியுரமாக வைக்கும் தொழுவுரம், மண்புழு உரத்தின் அளவை மரத்தின் வயதுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். முறையாகப் பராமரித்து வந்தால் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் அறுவடை செய்யலாம்.

நெல்லி சாகுபடிக்கு செம்மண் ஏற்றது. இதற்கெனப் தனி விதைப்பு பட்டம் கிடையாது. ஆனால், மழைக்கு முன்பாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்தால் நல்ல விளைச்சலை பார்க்கலாம். எந்த மாதத்தில் நடவு செய்கிறோமோ அதற்கு இரண்டு மாதத்துக்கு முன்பு, ஒரு வார இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 12 அடி மற்றும் வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளியில் 2 அடி சுற்றளவு, 2 அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். அப்போதே நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பழ மரங்களைப் பொறுத்த வரையில் சொட்டுநீர்ப் பாசனமே சிறந்தது.10 நாள்கள்வரை குழிகளை ஆற விட வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு 5 கிலோ மக்கிய தொழுவுரம் போட்டு, அதன்மீது செம்மண், நிலத்து மண் கலந்து 10 தட்டுகள்வரை போட வேண்டும். பிறகு, தண்ணீர்ப் பாய்ச்சிக் குழிகளை ஈரப்பதமாக்க வேண்டும். அப்போதே ஒவ்வொரு குழியிலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிராம் சூடோமோனாஸ் தூளைக் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், வேர்ப்புழுத் தாக்குதல் ஏதும் வராது.

பிறகு, செடிகளை நடவு செய்யலாம். ஒரே ரகமாக நடவு செய்யாமல் இரண்டு முதல் நான்கு ரக நெல்லியைக் கலந்து நடவு செய்தால் மகரந்தச்சேர்க்கை ஏற்பட்டுக் காய்ப்பு அதிகமாகும். 3 மாதங்கள் வரை, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் மட்டுமே பாய்ச்சி வர வேண்டும். பிறகு, 15 நாள்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும். (ஓராண்டுக்குப் பிறகு, 200 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் வரை பஞ்சகவ்யா கலந்து நீரில் விடலாம்) 7-ம் மாதம் செடி ஒன்றுக்கு அடியுரமாக ஒரு கிலோ மண்புழு உரம் வைக்க வேண்டும். பிறகு கவாத்து செய்ய வேண்டும்.

You may also like

Leave a Comment

20 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi