திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டினம் ஊராட்சியில் அடங்கிய ராமகிருஷ்ணா நகர், ஹாஜியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கப்பெறாததால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தினமும் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்கும் வகையில் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. அதற்கு முறையாக மின் மோட்டார் பொறுத்தப்படாமலும், சம்ப் எனப்படும் தரைமட்டத்தில் நீரை சேமிக்கும் தொட்டி கட்டப்படாமலும் பணிகள் அரைகுறையாக நின்றன.
கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்காமல் இருப்பதால் அப்பகுதிகளில் தொடர் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், புதிய நீர்த்தேக்க தொட்டி பயன்படுத்தப்படாத நிலையிலேயே, அதன் சில பகுதிகளில் சிமென்ட் கலவைகள் உதிர்ந்தும், பெயின்ட் உரிந்து போயும் பழுதான தொட்டி போல் காட்சியளிக்கிறது. இனிமேலும், காலம் தாமதிக்காமல் உடனடியாக நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.