சென்னை: தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணி காரணமாக வரும் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் ரயில்வே யார்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக தாம்பரம் வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வரும் 15, 16, 17 தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது. இதற்கு பதிலாக, அவை மாம்பலத்தில் கூடுதல் நேரத்துக்கு நிற்கும்.
இந்த 3 நாட்களில் பயணிகள் தாம்பரத்திற்கு பதில் செங்கல்பட்டில் ஏறிக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15ம் தேதி, சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை – நாகர்கோவில் அதிவிரைவு வண்டி, சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை – தூத்துக்குடி (முத்துநகர் விரைவு வண்டி), சென்னை – திருநெல்வேலி அதிவிரைவு வண்டி, சென்னை – செங்கோட்டை (பொதிகை அதிவிரைவு வண்டி) ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது.
அதே போல், ஆகஸ்ட் 16ம் தேதி, சென்னை – மதுரை (தேஜஸ் விரைவு வண்டி), சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை – தூத்துக்குடி, சென்னை – செங்கோட்டை (சிலம்பு விரைவு வண்டி) சென்னை – மதுரை அதிவிரைவு வண்டி ஆகிய ரயில்களும், ஆகஸ்ட் 17ம் தேதி சென்னை – மதுரை (தேஜஸ் விரைவு வண்டி), சென்னை – ராமேஸ்வரம் விரைவு வண்டி, சென்னை – தூத்துக்குடி உள்ளிட்ட விரைவு வண்டிகள் தாம்பரத்தில் நிற்காது.
மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 14ம் தேதி, திருநெல்வேலி – சென்னை அதிவிரைவு வண்டி, ராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி – சென்னை (முத்துநகர் விரைவு வண்டி) ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. ஆகஸ்ட் 15ம் தேதி நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு வண்டி, செங்கோட்டை – சென்னை (சிலம்பு விரைவு வண்டி),
மதுரை – சென்னை அதிவிரைவு வண்டி (22624), ராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி – சென்னை (முத்துநகர் விரைவு வண்டி), மதுரை – சென்னை (தேஜஸ் விரைவு வண்டி) ஆகிய ரயில்களும், ஆகஸ்ட் 16ம் தேதி நாகர்கோவில் – சென்னை அதிவிரைவு வண்டி, ராமேஸ்வரம் – சென்னை விரைவு வண்டி, தூத்துக்குடி – சென்னை (முத்துநகர் விரைவு வண்டி), மதுரை – சென்னை (தேஜஸ் விரைவு வண்டி) உள்ளிட்ட ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.