லண்டன்: 200 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில செய்தி நிறுவனமான தி கார்டியன் எக்ஸ் தளத்தில் இருந்து விலகியுள்ளது. 1821ம் ஆண்டு லண்டனில் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ் பின்னர் 1959ம் ஆண்டு ‘தி கார்டியன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸ் தளத்தின் வாயிலான அதன் சிஇஓ எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளை பரப்பிவந்ததே இந்த முடிவுக்கு காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் நச்சுத்தன்மை அதிகமாகி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வானதுக்கு எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் முக்கிய பங்காற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளது தி கார்டியன். நச்சுத்தன்மை வாய்ந்த பதிவுகளை இவரே முன்னின்று பரப்பியதாக பகிரங்கமாக சாடியுள்ளது. இதனிடையே தி கார்டியன் விலகியதை குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில்; அவர்கள் அழிவில் உள்ள செய்தி நிறுவனம் என மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.