கள்ளக்குறிச்சி: மாநில உரிமைகளை பெற பிரதமரை முதல்வர், அமைச்சர்கள் சந்திப்பில் தவறில்லை என எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடியாக கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பழைய பல்லவியை பாடி வருகிறார். திமுக தனது கொள்கையில் இருந்து என்றும் மாறாது. எந்த காலத்திலும் பாஜ கட்சியுடன் கூட்டணி என்பதும், அவர்களுடன் ஒத்துப்போவது என்பதும் கிடையாது. தமிழ்நாட்டில் நாம் கட்டும் அனைத்து வரிப்பணமும் ஒன்றிய அரசுக்கு செல்கிறது.
ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்டு வாங்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றால் அதற்கு நிதி தேவைப்படுகிறது. தமிழ்நாட்டின் பங்கைதான் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்காக தமிழக முதல்வர் பிரதமரை பார்ப்பது தவறா. தமிழ்நாட்டின் சாலை பணிகள் குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சரை நான் நேரில் சந்தித்து முறையிட்டால் உடனடியாக எங்கள் இருவருக்கும் இடையே உறவு வந்துவிட்டது என்று அர்த்தமா. எடப்பாடி பழனிசாமி அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார். மாநிலத்தின் உரிமைகளை பெறுவதற்காக ஒன்றிய அமைச்சரையும், பிரதமரையும் முதல்வரும், அமைச்சர்களும் சந்திப்பதில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


