புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு தடை விதித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த முடியாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்நிலையில், ஆந்திர பிரதேச அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த மனுவை நாங்கள் ஏற்க முடியாது. மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற வேண்டும்’’ எனக் கூறி மனுவை நிராகரித்தனர்.