டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 1983ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் எங்களுக்கு கவலை அளிக்கிறது.
எங்களது சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டுள்ளனர். பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கிறது. டெல்லியில் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என மல்யுத்த வீராங்கனைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கங்கை நதியில் பதக்கங்களை வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறியதை கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். பதக்கங்களை தூக்கி எறிவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பல்லாண்டு கால முயற்சி, மன உறுதியால் கிடைத்த பதக்கங்களை கங்கை கை நதியில் வீச நினைப்பது கவலையளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.