மதுரை: ஆடி மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிதனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. அழகர்கோயில் மலை மேல் உள்ள ராக்காயிம்மன் கோயிலில் பக்தர்கள் நிண்ட வரிசையில் நின்று நீராட்டி விட்டு தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு கூழ் வழங்கினர். கோயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, தேனியில் உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோயில், திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் ஆடி மாத 2வது வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையிலே கோயில்களில் பெண்கள் குவிந்து சிறப்பு தரிசனம் செய்தனர்.