சென்னை: உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ராமச்சந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.11.98 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் மேற்கொள்ளும் பணிகளும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில், கலைஞரால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடம் ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் 200 நபர்கள் அமரும் வகையிலான இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகின்றது. மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான ஒளிரும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலத்தை ரூ.11.34 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுத்தும் பணிகளும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலாத்தலங்களில் ரூ.7.09 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அதனை செயல்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகை யில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.