ஜெய்ப்பூர்: உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐகேஎப்) முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது. கபடி போட்டிகளை உலகளவில் நடத்தி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கடந்த 2004ல் சர்வதேச கபடி கூட்டமைப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இந்தியாவை சேர்ந்த வினோத் குமார் திவாரியும், செயலாளராக மலேஷியாவை சேர்ந்த சுந்தரேசனும் உள்ளனர். இந்த கூட்டமைப்பில் 31 நாடுகளின் தேசிய அளவிலான கபடி சங்கங்கள் இணைந்துள்ளன.
இந்நிலையில், உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்த தென் கிழக்கு ஆசிய கபடி கூட்டமைப்பும், தாய்லாந்து கபடி சங்கமும் திட்டமிட்டுள்ளன. இதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச சூப்பர் கபடி லீக் போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள எஸ்ஜே அப்லிப்ட் கபடி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு, சர்வதேச கபடி கூட்டமைப்பு எழுதியுள்ள பாராட்டு கடிதத்தில், ‘கபடி லீக்கை துவக்குவது எளிய செயல் அல்ல. இதற்கு, கபடியை பற்றிய ஆழ்ந்த புரிதலும், அபாரமான அரங்கேற்றல் திறனும், அர்ப்பணிப்பும் தேவை. இந்த நிறுவனத்தின் முயற்சிகள், இளைய வீரர்களுக்கு சிறந்த ஊக்கத்தை அளிக்கும். கபடி விளையாட்டை உலகளவில் புகழ்பெறச் செய்ய இந்த போட்டிகள் உதவும்’ எனக் கூறப்பட்டுள்ளது.