ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்புதான தினத்தையொட்டி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி ஆலந்தூர் நீதிமன்றம் எதிரே இன்று காலை நடந்தது. மாரத்தான் போட்டிக்கு, மாவட்ட மருத்துவரணி அவை தலைவர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாரத்தான் போட்டியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பரிசளிப்பு விழாவில், முதலிடம் பிடித்த கோயம்புத்தூரை சேர்ந்த சதீஷூக்கு ரொக்கப்பரிசாக 25 ஆயிரம், 2ம் பரிசாக பெங்களூரை சேர்ந்த கோவிந்த ராஜூக்கு 10 ஆயிரம், 3ம் இடம் பிடித்த ஊட்டியை சேர்ந்த நிகில்குமாருக்கு 5 ஆயிரம் ரொக்கப்பரிசுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
விழாவில், மருத்துவரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி என்.வி.என்.சோமு, மாநில மருத்துவரணி செயலாளர் எழிலன் நாகநாதன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், ஜெயக்குமார், மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், பொதுக்குழு உறுப்பினர் கீதா ஆனந்தன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் கே.ஆனந்தன், துணை அமைப்பாளர் வாசீம், கவுன்சிலர் சாலமோன், மாணவரணி சத்ய பிரபு, கலாநிதி குணாளன், ராமமூர்த்தி, பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் விக்கி, கோ.பிரவீன் குமார், திலீப், வட்ட செயலாளர்கள் முரளிகிருஷ்ணன், ஜெ.நடராஜ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், சரவணா, கிருஷ்ணமூர்த்தி, கே.கே.சண்முகம், குரூஸ், இ.கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவரணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.