சென்னை: உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக சென்னை பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை படைத்தனர். குறிப்பாக, ஒரே அடியில் 3000 ஓடுகளை தூள் தூளாக்கி அதிரடி காட்டினர். சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள 417 சென்னை பள்ளிகளில் 29 பள்ளிகளில் 1500 மாணவிகளுக்கு அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி, 10 பயிற்றுநர்களைக் கொண்டு 4 மாதங்களாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் நேற்று மேயர் பிரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பள்ளி மாணவிகள் உலக தற்காப்பு கலை வரலாற்றில் முதன்முறையாக கராத்தே பயிற்சியில் 3 உலக சாதனைகளை நிகழ்த்தினர். முதல் சாதனையாக, 4 மாத பயிற்சியில் முதல்நிலை வெள்ளைப் பட்டையில் இருந்து, 3ம் நிலை பச்சை பட்டைக்கு தேர்வாகி சாதனை படைத்தனர். 2வது சாதனையாக, ஒரே நேரத்தில் 1500 மாணவிகள் சுமார் 1000 குத்துகள் என மொத்தம் 15 லட்சம் குத்துகள் குத்தி தங்களின் மன வலிமையையும், உடல் வலிமையையும் நிரூபித்து சாதனை படைத்துள்ளனர்.
3ம் சாதனையாக, பெண்களின் கரங்களால் படைக்கவும், தடைகளை உடைக்கவும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் ஒரு நொடியில் ஒரே அடியில் 3000 ஓடுகளை தூள் தூளாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த அதிரடி உலக சாதனைகளை உலக அரங்கில் முதலில் முயற்சி செய்தது சென்னை பள்ளி மாணவியர்கள் மட்டுமே. இந்த 3 உலக சாதனை நிகழ்வுகளை “சோழன் உலக சாதனைப் புத்தகம் உலக சாதனைகளாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இணை ஆணையர் (கல்வி) விஜயா ராணி, மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார், நிலைக்குழு தலைவர் (கல்வி) பாலவாக்கம் விசுவநாதன், மாமன்ற உறுப்பினர்கள் பரிதி இளம்சுருதி, ஏழுமலை, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் நீலமேகம், ஆர்த்திகா நிமலன், பாஸ்கரன், முரளி, செல்வராஜ், சுப.இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.