சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் 2020-21ல் அன்னிய நேரடி முதலீடு ஈர்த்தலில் 3வது இடத்தில் இருந்த தமிழகம், 2022-23ல் 27.7 சதவீதம் குறைவாக அன்னிய முதலீட்டை ஈர்த்து, 8வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி எனது தலைமையிலான அதிமுக அரசில், ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 6 மாதங்களில், தமிழகத்திற்கு வரப்பெற்ற அன்னிய நேரடி முதலீடு ரூ.1,97,582 கோடி. அதாவது, 31,140 மில்லியன் அமெரிக்க டாலர். 31.7.2023 அன்று மு.க.ஸ்டாலின் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ரூ.1,600 கோடி முதலீட்டில், 6000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய மொபைல் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்து தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டிருந்தார். தமிழகத்திற்கு பெருமளவில் அன்னிய நேரடி முதலீட்டை அதிமுக அரசு ஈர்த்த நிலையில், இன்றைக்கு முதலீடுகள் இந்தியாவின் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. எனவே, 2024 ஜனவரி முதல் வாரம் திமுக அரசு நடத்த உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், மக்களின் நலனுக்கான திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் இந்த அரசு ஈர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.