அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 192 ரன்களை பாகிஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பும்ரா, சிராஜ், ஹர்திக், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 50, முகமது ரிஸ்வான் 49, இமாம் உல்-ஹக் 36 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். பாகிஸ்தான் அணி 41 ரன்கள் எடுத்திருந்தபோது அப்துல்லா ஷபீக் 20 ரங்களில் வெளியேறினார். அடுத்து 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இமாம்உல்ஹக்-ம் வெளியேறினார்.
அடுத்து பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் கைகோர்த்து அணியை சற்று சரிவில் இருந்து மீட்டனர். 50 ரன்கள் எடுத்து பாபர் அசாம் வெளியேற அடுத்து வந்த சவுத் ஷகீல் 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து 49 ரன்களில் முகமது ரிஸ்வானும் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.
பின்னர் அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இறுதியில் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா, பாண்டியா, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.