தர்மசாலா: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 274 ரன்களை நியூசிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 130 ரன்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
உலகக்கோப்பை தொடரின் 21வது போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாமைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. கடந்த சில போட்டிகளில் சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவன் கான்வே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வில் யங் 17 ரன்களில் வெளியேற 19 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரன் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நியூசிலாந்து அணி 178 ரன்கள் எடுத்திருந்தபோது 75 ரன்களில் ரச்சின் ரவீந்திரன் அவுட் ஆனார். இருவரும் இணைந்து 159 ரன்களை எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மறுமுனையில் டேரில் மிட்செல் நிலைத்து நின்று விளையாடி கொண்டிருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 130 ரன்களையும், ரச்சின் ரவீந்திரன் 75 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்திக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.