விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த திராவிட மாடல் அரசு ஏராளமான உதவிகள் செய்து வருகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு, இந்த திட்டத்தில் பயன்பெறுகிற பயனாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் எண்ணற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி சரித்தர சாதனை புரிந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற செஸ் ஒலிம்யாட் போட்டி மாமல்லபுரத்தில் நடத்தியதோடு ஒரு விளையாட்டை பண்பாட்டு திருவிழாவாகவும் நடத்தியது. இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவிலேயே முதல்முதலாக சென்னையில் நடத்தப்பட்டது. இதன்மூலம் மோட்டார் பந்தய விளையாட்டில் உலக அளவில் இந்தியாவுக்கு தமிழ்நாடு பெருமையை தேடித்தந்தது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சர்வதேச அலை சறுக்குப் போட்டி, சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளானது சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த 5,630 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அதோடு இல்லாமல் தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் தமிழ்நாட்டில் உள்ள நகர்புற, கிராமப்புற விளையாட்டுகளுக்கும் வீரர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகின்றது. மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டிகளுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் 3.76 லட்சம் வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தீவிர செயல்பாட்டினால் விளையாட்டுகளில் பங்கு பெறும் வீரர்கள் வீராங்கனைகள் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் 5.29 லட்சம் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்தனர்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்தல், சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்க டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்,
திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கும் திட்டம், நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் மூலம் திராவிட மாடல் ஆட்சியில் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிடமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது.