கும்பகோணம்: ஜி20 மாநாட்டு அரங்கத்தின் முகப்பில் வைப்பதற்காக 28 அடி உயரமுள்ள நடராஜர் சிலை சுவாமிமலையில் இருந்து நேற்று புதுடெல்லிக்கு புறப்பட்டது. பொதுமக்கள் மலர்தூவி வழியனுப்பி வைத்தனர். புதுடெல்லி பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9, 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் சார்பில் உலகத்திலேயே பெரிய அளவிலான நடராஜர் உலோக சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலை வடிவமைக்கும் பணி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் ஸ்ரீதேவசேனாதிபதி சிற்பக் கூடத்திற்கு தரப்பட்டது.
இச்சிற்பகூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீகண்டன், தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த சிலையை வடிவமைத்தனர். இந்நிலையில் நேற்று காலை இந்திராகாந்தி தேசிய கலை மையத்தலைவரும், பேராசிரியருமான ஆர்த்தல் பாண்டியா தலைமையிலான மைய அலுவலர்கள் ஜவஹர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் சிலையை பெற்று கொண்டனர். உலகத்திலேயே பெரிய அளவிலான நடராஜர் சிலை சுவாமிமலையிலிருந்து புதுடெல்லிக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்றனர். இதையறிந்து பொதுமக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு மலர்தூவி வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஸ்தபதிகள் கூறுகையில், ‘சோழர் கால முறைப்படி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் மீதமுள்ள 25 சதவீதப்பணிகளை மேற்கொள்ள இங்கிருந்து 15க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் புதுடெல்லிக்கு செல்லவிருக்கின்றனர். இந்த சிலை சுமார் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25 டன் எடை கொண்டது. இது சுமார் ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே 28 அடி உயரமுள்ள பெரிய நடராஜர் சிலை இந்த சிலை தான்’ என்றனர்.