தோஹா: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று இந்திய வீரர் மனுஷ் ஷா, வீராங்கனை தியா சிதாலே இணை அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கத்தார் நாட்டின் தோஹா நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீரர் மனுஷ் ஷா, வீராங்கனை தியா சிதாலே இணை, அல்ஜீரியாவின் மெஹ்தி பொலோசா, மலிஸா நஸ்ரி இணையுடன் மோதியது.
இப்போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய இணை, 3-0 (11-2, 11-7, 11-6) என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து, அடுத்த சுற்றுப் போட்டியில், கொரியாவின் ஓஜுன்சுங்-கிம் நயியோங் இணை அல்லது, நியூசிலாந்து இணை டீன் ஷு- ஜோஸலின் லாம் இணையுடன் இந்திய இணை மோதும்.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பிரான்ஸ் நாட்டின் திபால்ட் போரே-லியானா ஹோசார்ட் இணையுடன் இந்தியாவை சேர்ந்த வீரர் ஹர்மீத் – வீராங்கனை யஷஸ்வினி இணை மோதினர். முதல் இரு செட்களை இந்திய இணை, 11-8, 11-6 என்ற கணக்கில் வென்றனர். இருப்பினும் பின் நடந்த செட்களை இழந்து தோல்வியை தழுவினர்.