அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர், அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை தொடர், இந்தியாவில் இன்று தொடங்கி நவ. 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் மும்பை வாங்கடே மைதானத்திலும் (நவ. 15), கொல்கத்தா ஈடன் கார்டனிலும் (நவ. 16) நடக்க உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி, அகமதாபாத் மோடி அரங்கில் நவ. 19ம் தேதி நடைபெறும்.
அகமதாபாத்தில் இன்று நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து மோதுகிறது.
சொந்த மண்ணில் நடக்கும் தொடரில், 3வது முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் அக். 8ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் அக். 14ல் அகமதாபாத்தில் நடக்கிறது.