செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மருத்துவத்துறை சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தாய்ப்பால் குறித்து நேற்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு கோலங்கள் போடப்பட்டிருந்தன.
இதில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இல்லம்தேடி மருத்துவம் குறித்தும் வண்ண வண்ண கோலங்கள் வரையப்பட்டு, அதில் அரிசி, பருப்பு வகைகள், பூ வகைகளை தூவி அழகுப்படுத்தி மக்களுக்கு தாய்ப்பாலின் மகிமை, தாய்ப்பால் கொடுப்பதால் என்னென்ன பயன்கள் உண்டாகும் என்பதை உணர்த்தும் வகையில் இதயம் போன்ற வடிவில் கோலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விழிப்புணர்வு கோலங்களை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டார்.