சென்னை: உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இதயம் வடிவில் ஒளிரும் சிக்னல்கள் அமைத்து, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
உலக டிராபிக் சிக்னல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின் பற்றும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள அண்ணாசாலை, காமராஜர்சாலை என முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் ‘இதயம்’ வடிவில் ஒளிரும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிண்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் திருவல்லிக்கேணியில் போக்குவர்தது இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அவர்களது எல்லைக்குட்பட்ட சிக்னல்களில் உலக டிராபிக் சிக்னல் குறித்தும், சாலை விதிகளை முறையாக மதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் பதாகைகள் மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்தனர். சென்னையில் அனைத்து சிக்கல்களும் இன்று ‘இதயம்’ வடிவில் ஒளிருவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.