ரியாத்: உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் கர்நாடகாவின் ‘ஹொய்சாலா புனித கோயில்’ சேர்க்கப்பட்டதாக ‘யுனெஸ்கோ’ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 45வது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான ‘யுனெஸ்கோ’, உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ‘ஹொய்சாலா புனித கோவில்’ சேர்க்கப்பட்டதாக அறிவித்தது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாந்தி நிகேதனைச் சேர்த்துள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடகாவில் அமைந்துள்ள ஹொய்சலா வம்சத்தின் அழகான 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.