
மாமல்லபுரம்: உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், நேற்று குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே மாமல்லபுரத்திற்கு வந்திருந்தனர். உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க இலவசம் என அறிவிக்கப்பட்டதால், மாமல்லபுரத்தில் குறைந்தளவு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாலையில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலையிலும் பயணிகள் குறைந்து காணப்பட்டனர். உலகம் முழுவதும் உலக பாரம்பரிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த தினத்தில், சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.இதையொட்டி, நேற்று சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றி பார்க்க நேற்று குறைந்தளவு பயணிகளே குவிந்தனர். காலை 6 மணி முதலே இயற்கை காற்றை சுவாசித்தபடி புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ணா மண்டபம், மகிஷாசூரமர்த்தினி, புலி குகை உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிட்டு அதன் முன்பு நின்று செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சிலர், குடும்பம் குடும்பமாக வந்து, தாங்கள் கொண்டு வந்த உணவை பரிமாறி மகிழ்ந்தனர். கடற்கரையிலும் குறைந்தளவு பயணிகளே காணப்பட்டனர். மாலையில் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போதும் கூட்டம் குறைவாகத்தான் காணப்பட்டது.
- முன்னதாகவே அறிவிக்க வேண்டும்
உலக பாரம்பரிய தினத்தையொட்டி நேற்று புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவசம் என ஒன்றிய தொல்லியல் துறை அறிவிந்திருந்தது. இந்த தகவலை 2 நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தால் செய்தி மக்களை சென்றடைந்து இருக்கும். அவர்கள் இலவசம் என வந்து சுற்றி பார்த்திருப்பார்கள். வெளியூர், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகமானோர் வந்து பார்த்திருப்பார்கள். எனவே, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்ற தகவலை 2 நாட்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.